சென்னை: டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மது பானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான கால கட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த 40 வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை திடீர் சோதனை நடத்தினர்.
டாஸ்மாக் நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில், டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக டாஸ்மாக் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், அமலாக்கத் துறை விசாரணையை முடக்கும் நோக்கில் மாநில அரசு செயல்படுவதாகவும், ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்கை நியாயமாகவும், எந்த இடையூறும் இன்றி விசாரிக்க வேண்டும் என்றால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என அந்த மனுவில் வெங்கடாசலபதி கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க மாநில அரசுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் வி லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும், சிபிஐ, அமலாக்கத் துறை, டாஸ்மாக் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.