கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் முதன்முறையாக கோவை காளப்பட்டி அருகே நேத்ரா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான "நம்ம சிறப்பு பூங்கா" என்ற பெயரில் பூங்கா திறக்கப்பட்டது.
கோவை மாவட்டம் காளப்பட்டி அருகே நேத்ரா நகர் பகுதியில் கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இணைந்து, "நம்ம சிறப்பு பூங்கா" என்ற பெயரில் சிறப்பு குழந்தைகளுக்கான பூங்காவை அமைத்துள்ளன. இதனை, மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் இன்று (ஏப்ரல் 7) திறந்து வைத்து பார்வையிட்டனர்.
"நம்ம சிறப்பு பூங்கா" சிறப்புகள்:

"நம்ம சிறப்பு பூங்கா" என பெயரிடப்பட்டுள்ள இந்த பூங்கா மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு திறன் கொண்ட குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு விளையாடுவதற்காக வைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாக விளையாடும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி சிறப்பு குழந்தைகள் அவர்களின் திறன்களை வளர்த்து கொள்ளும் விதமாக, பல்வேறு செயல்பாடுகள், பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதனையும் மாற்றுத்திறனாளிகளே வழங்குகிறார்கள்.
பெற்றொர்களுக்கு கவலை தேவையில்லை:
இந்த பூங்காவில் ஊஞ்சல்கள், சித்திர சபை, மகிழ் வனம், வானமே எல்லை, உணர்வு பாதை, ஜென் தோட்டம், மலையும் சரிவும், இசை பள்ளி என பல்வேறு இடங்கள் உள்ளன. வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் இந்த பூங்கா செயல்படாது. இதர நாட்களில் வேலைகளுக்கு செல்வோர் அவர்களது மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் சிறப்பு திறன் குழந்தைகளை இங்கு விட்டு செல்லலாம். அவர்களை பார்த்துகொள்வதற்காக பராமரிப்பாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அரசியல் கட்சியின் பொதுக்கூட்ட மேடையில் 'சைகை மொழி' ஆசிரியை ஏன்? மார்க்சிஸ்ட் மாநாட்டில் நெகிழ்ச்சி சம்பவம்! |
இங்கு குழந்தைகளுக்கு பிடித்த சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. குறிப்பாக, மாற்றுத்திறனாளி, சிறப்பு திறன் கொண்டவர்களாக இருந்து வாழ்வில் சாதனை புரிந்த பீத் ஓவன், எலன் கெல்லர் (Helen Kelle), ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking), பாடகி வைக்கம் விஜயலட்சுமி (Vaikom Vijayalakshmi), லூயிஸ் பிரெய்லி (Louis Braille ) ஆகியோரின் புகைப்படங்கள் ஓவியங்களாக இடம்பெற்றுள்ளன.

சிறப்பு குழந்தைகள் மட்டும் தான் அனுமதியா?
"நம்ம சிறப்பு பூங்கா" குறித்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் பேசியதாவது, “மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இணைந்து மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான பூங்கா இன்று திறந்து வைத்துள்ளோம். மாற்று திறனாளிகளின் மனநிலை மற்றும் ஆரோக்கியத்தை உயர்த்தும் வகையில் இந்த பூங்கா அமையும். இங்கு சிறப்பு குழந்தைகளுக்கு என்று தனி தனியாக விளையாட்டு, இசை, சித்திர சபை (Art abode) போன்ற பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த பூங்காவிற்கு சிறப்பு குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து குழந்தைகளும் வருகை புரியலாம். ஆனால், சிறப்பு குழந்தைகளுக்கு அதிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்காவின் வரவேற்பை பொறுத்து அடுத்த கட்டமாக பல்வேறு இடங்களில் இதுபோன்று பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் முதன்முறையாக கோவையில்:
தொடர்ந்து, இது குறித்து ஏற்றம் அறக்கட்டளை தலைவர் மோகனசுந்தரம் பேசியதாவது, “வரும் காலங்களில் இது போன்ற பூங்காக்கள் அமைப்பதற்கு இது ஒரு அடித்தளமாக அமையும். இதனைப் பார்த்து பலரும் பல்வேறு இடங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான பூங்காவை அமைப்பார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு மன அழுத்தங்கள் அதிகமாக இருக்கும். அவர்கள் வெளியில் வருவதற்கு முனைப்பு காட்டினால் நன்றாக இருக்கும். அதில் ஒரு சிறப்பான செயல் இந்த பூங்கா” என்றார்.
தொடர்ந்து பூங்கா குறித்து பேசிய எழுத்தாளர் யாழினி, “தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான பூங்காவாக இதனை திறந்து வைத்துள்ளோம். மாற்றுத்திறனாளிகளுக்கு மன அமைதி தரும் வகையில் இந்த பூங்கா அமையும்” என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்