Bihar Election Results 2025

ETV Bharat / state

பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை; எத்தனை நாள் கூட்டத்தொடர், என்னென்ன நிகழ்வுகள்?

தமிழக சட்டப்பேரவை நாளை கூட உள்ள நிலையில், கூட்டத்தொடர் எவ்வளவு நாள்கள் நடைபெற உள்ளது என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு இன்று விவரித்துள்ளார்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : October 13, 2025 at 2:02 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழக சட்டப்பேரவை நாளை கூட உள்ள நிலையில்் இக்கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

ஆறு மாதங்களுக்கு பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை கூடுகிறது. நாளை துவங்கி அக்டோபர் 17-ம் தேதி வரை நான்கு நாட்கள் இக்கூட்டதொடர் நடைபெறுகிறது.

முன்னதாக, சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பான அலுவல் ஆய்வுக்கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சபாநாயகர் அப்பாவு பேட்டி (ETV Bharat Tamil Nadu)

கூட்டத்துக்கு பின் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை துவங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது. பேரவை வழக்கம்போல் காலை 9.30 மணிக்கு கூடும். பேரவையின் முதல் நாளான நாளை, மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, மறைந்த ஐஏஎஸ் அதிகாரி மருத்துவர் பீலா வெங்கடேசன் மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும்.

சட்டப்பேரவை கூட்ட தொடர் நிகழ்ச்சி நிரல்
சட்டப்பேரவை கூட்ட தொடர் நிகழ்ச்சி நிரல் (ETV Bharat Tamil Nadu)

மேலும், கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்படும். அதன்பின் பேரவை நிகழ்ச்சிகள் அன்றைய தினம் ஒத்திவைக்கப்படும்.

பின்னர் இரண்டாம் நாள் (அக்.15) நடைபெறும் பேரவை கூட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும். மூன்றாம் நாள்( அக்.16) கூட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.

தொடர்ந்து, 4ஆம் நாள் (அக்.17) கூட்டத்தொடரில் 2025-2026 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலுரை நடைபெறும். சட்டமன்ற கூட்டம் நடைபெறும் அக்.15, 16, 17 ஆகிய தேதிகளில் பேரவை துவங்கிய பின் வினாக்கள் - விடைகள் நேரம் நடைபெறும். அதனை தொடர்ந்து 2025-26 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட முன்னறிவு பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். மேலும் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

இன்றைய அலுவல் ஆய்வு கூட்டத்தில் பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்" என்று அப்பாவு தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோரும் உடனிருந்தனர்.

கரூர் துயர சம்பவம், கோல்டிரிப் இருமல் மருந்து விவகாரம் என பரபரப்பான சூழலில் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.