திருநெல்வெலி: மீன்பிடி தொழிலுக்காக நெல்லையிலிருந்து ஈரான் சென்ற மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி மீனவக் குடும்பத்தினர் அளித்த மனுவின்பேரில், அங்கு சிக்கியிருப்பவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்துவரும் கடுமையான போர் காரணமாக மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் நிலவிவருகிறது. இதனால், கல்வி, வேலை வாய்ப்பிற்காக ஈரான் நாட்டிற்குச் சென்ற இந்தியர்களை தாயகம் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் மற்றும் திசையன்விளை தாலுகாவில் அமைந்துள்ள கடற்கரை கிராமங்களில் இருந்து ஏராளமான மீனவர்கள், மீன்பிடி தொழிலுக்காக ஈரான் நாட்டிற்கு சென்றுள்ளனர். போர் நிலவிவரும் காரணத்தினால், அங்குள்ளவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில், தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம், நெல்லை மீனவர்களின் குடும்பத்தினர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த கோரிக்கையின் அடிப்படையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமாரை மீனவ பிரதிநிதிகள் சந்திக்க அப்பாவு இன்று (ஜூன் 21) ஏற்பாடு செய்தார். அப்போது, ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மீனவ மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதையும் படிங்க: இஸ்ரேல் - ஈரான் போர்: இந்தியாவுக்கு என்ன ஆபத்து? |
இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பேசியதாவது, “நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மீனவர்கள், ஈரான் நாட்டிற்குச் சென்று மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக, ஈரான் நாட்டில் உள்ள தமிழக மீனவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உவரி பகுதியைச் சேர்ந்த 36 பேர் ஈரானில் உள்ள நிலையில், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி அவர்களது குடும்பத்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆட்சியரின் உத்தரவின் பேரில், ராதாபுரம், திசையன்விளை வட்டாட்சியர்கள் மூலம் ஈரானில் சிக்கியுள்ளவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், தமிழ்நாடு முழுவதுமிருந்து கல்வி மற்றும் பணிகளுக்காக ஈரான் சென்ற அனைவரையும் மீட்கும் முயற்சியினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரானில் சிக்கியுள்ளவர்களை சந்திக்க, அயலக வாரியத்தினர் முயற்சி எடுத்து வருகின்றனர். மேலும், உயர் அதிகாரிகள் மூலமும் ஆன்லைன் மூலமும் ஈரானில் இருப்பவர்கள் குறித்த தகவலை பதிவு செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.