சென்னை: ரயில் பயணங்களின்போது பயணிகள் எந்த அளவுக்கு லக்கேஜ்களை கொண்டு செல்ல வேண்டும் என்ற அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இது தெரியாமல் அதிக லக்கேஜ்களை எடுத்துச் சென்றால் அதற்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணத்தை பிடிக்காதவர்களே இல்லை என்று கூறலாம். பாதுகாப்பு, கழிவறை வசதி, வேகமான பயணம் போன்ற பல்வேறு காரணங்களால் ரயிலில் செல்வதை பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். அதுவும் தற்போது கோடை விடுமுறை வரவுள்ளதால் தமிழகத்தில் மட்டும் லட்சக்கணக்கானோர் ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்திருக்கிறார்கள். இவ்வாறு செல்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு மாதக்காலமாவது தங்கள் சொந்த ஊர்களிலோ, உறவினர் வீடுகளிலோ தங்கும் எண்ணத்துடன் செல்வார்கள்.
அதனால் பலர் தங்களுடன் அதிக லக்கேஜ்களையும், தங்களின் உறவுகளுக்காக பலகாரங்கள், பழங்கள் என கிலோக்கணக்கிலான பொருட்களையும் எடுத்துச் செல்ல முடிவு செய்திருப்பார்கள். அவர்களுக்கான முக்கிய அறிவிப்பைதான் தெற்கு ரயில்வே தற்போது வெளியிட்டுள்ளது.
Traveling by train? Southern Railway makes it easy!
— Southern Railway (@GMSRailway) April 13, 2025
Here's a handy guide to your free luggage allowance based on your ticket class.
Travel light and hassle-free! #TravelSmart #IndianRailways #LuggageGuide #TrainJourney #TravelHacks #SouthernRailway pic.twitter.com/kwAHic6BoU
இதையும் படிங்க: திருப்பதி டூ புதுச்சேரி ரயில் பயணிகளுக்கு நற்செய்தி! |
ரயில் பயணத்தின்போது எவ்வளவு லக்கேஜ்களை பயணிகள் கொண்டு செல்லலாம் என்பது குறித்து தெற்கு ரயில்வே சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்பவர்கள் 70 கிலோ வரை லக்கேஜ்களை கொண்டு செல்லலாம். ஏசி இரண்டாம் டயர் பெட்டியில் பயணம் மேற்கொள்வோர் 50 கிலோ லக்ஜேக்களையும், ஏசி 3 டயர் பெட்டி மற்றும் இரண்டாம் வகுப்பு சாதாரண ஸ்லீப்பர் பெட்டியில் 40 கிலோ லக்கேஜ்களையும், இரண்டாம் வகுப்பு இருக்கை வசதிகொண்ட பெட்டியில் பயணிப்போர் 35 கிலோ லக்கேஜையும் எடுத்துச் செல்லலாம்.
அனுமதிக்கப்பட்ட இந்த எடையை காட்டிலும், கூடுதல் எடைகொண்ட லக்கேஜ்களை எடுத்துச் சென்றால் நிர்ணயிக்கப்பட்ட லக்கேஜ் கட்டணத்தைவிட 1.5 மடங்கு அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. எனவே, ரயிலில் பயணிப்பவர்கள் இதனை தெரிந்துகொண்டு செல்வது நல்லது.
இதேபோல, ரயில்களில் இன்னும் சில பொருட்களை கொண்டு செல்லவே கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய கற்பூரம் உள்ளிட்ட பொருட்கள், பட்டாசுகள், கெமிக்கல்கள் போன்றவற்றை கொண்டு செல்வதற்கும் ரயில்வே தடை விதித்திருக்கிறது. இதுபோன்ற பொருட்களை கொண்டு சென்று ரயில்வே போலீஸாரிடம் பிடிபட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள்அபராதத்துடன் சட்ட நடவடிக்கையையும் எதிர்கொள்ள நேரிடும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
