திருநெல்வேலி: கோடை விடுமுறையை கருத்திலஸ்கொண்டு நெல்லை - செங்கோட்டை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே முதன்மை இயக்க மேலாளர் வெளியிட்டுள்ளார்.
பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிந்து நாளை முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக பயணம் செய்யும் இந்த விடுமுறை காலங்களை சிறப்புமிக்கதாக மாற்ற, கூடுதல் போக்குவரத்து சேவைகள் வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், நெல்லை - செங்கோட்டை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
தற்போது, 12 பெட்டிகளுடன் இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. கோடை விடுமுறை நெருங்கும் வேளையில், குறைந்தளவு பெட்டிகளுடன் ரயில்களை இயக்கினால், பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாவார்கள் என்ற கருத்துகள் நிலவியது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களின் வாயிலாக பலர் கோரிக்கை வைத்து வந்தனர்.
மேலும், மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் நேரடியாக பொதுமக்களுடன் பயணம் மேற்கொண்டு நெல்லை - செங்கோட்டை ரயில் பயணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கூட்டம் நிரம்பி வழிந்ததைக் கண்ட அவர், பயணிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.
அதன் அடிப்படையில், இன்றைய (ஏப்ரல் 24) தினம் மதுரையில் நடைபெற்ற ரயில்வே துறை கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், நெல்லை - செங்கோட்டை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைத்தால் விடுமுறை காலங்களில் மக்கள் சிரமமில்லாமல் பயணம் மேற்கொள்வார்கள் என்று கோரிக்கை வைத்தார்.
இதனை ஆய்வுக்குட்படுத்திய ரயில்வே நிர்வாகம், இன்று புதிய முடிவை எடுத்துள்ளது. அதாவது, 12 பெட்டிகளுடன் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயிலில், கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 16 பெட்டிகள் கொண்ட ரயிலாக இனி இயக்கப்படும் என தென்னக ரயில்வேயின் முதன்மை இயக்க மேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஒரு நாளில் 4 பயணிகள் ரயில் திருநெல்வேலியில் (நெல்லை) இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படுகிறது. முதல் ரயில் காலை 6:50-க்கு நெல்லை ஜங்ஷனில் இருந்து புறப்படும். தொடர்ந்து;
- நெல்லை டவுன் (6:56),
- பேட்டை (7:02),
- சேரன்மகாதேவி (7:12),
- காரைக்குறிச்சி (7:18),
- வீரவநல்லூர் (7:23),
- கல்லிடைக்குறிச்சி (7:29),
- அம்பாசமுத்திரம் (7:37),
- கீழ ஆம்பூர் (7:43),
- ஆழ்வார்குறிச்சி (7:49),
- ராவணசமுத்திரம் (7:55),
- கீழக் கடையம் (8:01),
- மேட்டூர் (8:07),
- பாவூர்சத்திரம் (8:13),
- கீழப்புலியூர் (8:19),
- தென்காசி ஜங்ஷன் (8:25)
இதையும் படிங்க |
வழியாக செங்கோட்டைக்கு காலை 9 மணிக்கு சென்றடையும். 15 இடை நிறுத்தங்களை கடந்து செல்லும் இந்த ரயிலின் பயண தூரம் 2 மணிநேரம் 10 நிமிடங்கள் ஆகும்.
இதேபோல காலை 9:50 மணிக்கு, பகல் 1:40-க்கு, மாலை 6:20-க்கும் என மொத்தம் நான்கு பயணிகள் ரயில் நெல்லை - செங்கோட்டை இடையே இயக்கப்படுகிறது. இதேபோல மறுமார்க்கத்திலும் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.