சென்னை: ராணுவ வீரருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவில்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு புகார் அளித்தார்.
அதில், "எனது மனைவிக்கு ஜெயாவுக்கு 2018ஆம் ஆண்டு தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனையில் இருந்த தீக்காய பிரிவு மருத்துவர் பிரபாகரன், 10 நாட்கள் விடுமுறையில் செல்வதாகவும், அதனால் பின்னர் வந்து சிகிச்சை அளிப்பதாகவும் தெரிவித்தார். என் மனைவி மிகவும் உடல் நலம் குன்றிய நிலையில் இருந்ததால் உடனே சிகிச்சையை தொடங்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.
இதனால் கோபமடைந்த மருத்துவர், மருத்துவமனையில் உள்ள மற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் என் மனைவிக்கு சிகிச்சை அளிக்க கூடாது எனவும், ஜெய் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கும் படி அறிவுறுத்தினார். இதனால் அந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக என் மனைவியை சேர்த்தேன்.
அந்த மருத்துவமனையை அரசு மருத்துவர் பிரபாகரன்தான் நடத்தி வருகிறார். அந்த மருத்துவமனையில் சிகிச்சையை தொடங்கிய உடன் 2 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என மருத்துவர் பிரபாகரன் தெரிவித்தார். ஆனால், என்னிடம் இருந்த ரூ.20 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தினேன். அதை ஏற்காத மருத்துவர் பிரபாகரன், மீதத் தொகையை செலுத்தினால் தான் சிகிச்சை தொடங்கப்படும் என தெரிவித்தார்.
வேறு வழியின்றி மீதமுள்ள பணத்தையும் செலுத்தினேன். இதனைதொடர்ந்து 40 நாட்கள் மருத்துவ சிகிச்சை சேர்த்து 11 லட்சத்து 14 ஆயிரத்து 31 ரூபாயை செலுத்தினேன். ஆனால், என் மனைவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் இது குறித்து என் உடன் பணியாற்றும் நண்பர் ராணுவ வீரர் கதிர்வேலிடம் கூறினேன்.
அவர் டாக்டர் பிரபாகரனின் மருத்துவமனைக்கு வந்து என் சார்பில் என் மனைவியின் சிகிச்சை தொடர்பான விவரங்களை வழங்கும் படி கேட்டார். ஆனால், சிகிச்சை விவரங்களை தர முடியாது என மறுத்ததுடன், தொடர்ந்து வலியுறுத்தினால் விஷ ஊசி செலுத்தி ஜெயாவை கொன்றுவிடுவேன் என்றும் மருத்துவர் பிரபாகரன் மிரட்டினார். பின்னர், ஜெய் மருத்துவமனையில் இருந்து என் மனைவியை டிஸ்சார்ஜ் செய்து மீண்டும் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவருக்கு, சிகிச்சை அளிக்க முடியாது எனவும், திருநெல்வேலி, தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கும் படி மருத்துவர் பிரபாகரன் தெரிவித்தார்.
ஏற்கனவே, 9 லட்சம் ரூபாய் வங்கியில் கடனாகவும், நகைகளை விற்றும் 11 லட்சம் ரூபாயை சிகிச்சைக்காக வழங்கியுள்ளதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். இதனிடையே, சிகிச்சை பலனின்றி ஜெயா உயிரிழந்தார். எனது மனைவியை விஷ ஊசி செலுத்து மருத்துவர் பிரபாகன் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது. அதனால், மருத்துவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,"என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன், மருத்துமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கமலவாசன், மருத்துவர் வெங்கடேஸ்வர ஶ்ரீ, மருத்துவர் பிரபாகரன், செவிலியர்கள் குமரேஷ்வரி, குருலட்சுமி ஆகியோர் விளக்கமளிக்க உத்தரவிட்டார். இதுகுறித்து கண்காணிப்பாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ”தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை செய்ததாகவும், மருத்துவர் பிரபாகரன் மீது கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை” எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, புகாரை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் பிறப்பித்த உத்தரவில், பாதிக்கப்பட்ட ராணுவ வீரருக்கு மொத்தம் ரூ.50 லட்சம் இழப்பீடாக 4 வாரத்தில் வழங்க வேண்டும். அரசு சார்பில் 6 லட்சம் ரூபாயும், மருத்துவர் வெங்கடேஸ்வர ஶ்ரீயிடம் இருந்து 2 லட்சம் ரூபாயும், மருத்துவர் பிரபாகரன் 40 லட்சம் ரூபாயும், செவிலியர்கள் குமரேஷ்வரி, குருலட்சுமி ஆகியோரிடம் தலா 1 லட்சம் வசூலித்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மருத்துவர் பிரபாகரனை அரசு பணியில் இருந்து உடனே நீக்கி, மருத்துவர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெய் மருத்துமனையில் போலி மருத்துவர்கள் குறித்து விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தனியார் மருத்துமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் குறித்து அரசு கண்காணிக்கவும், அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு ஒரு நோயாளியும் மாற்றம் செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்,"எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தொழில்துறை முதன்மை செயலாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம்! நீதிபதிகள் உத்தரவு!
மேலும் அரசு மருத்துவமனை பணி நேரத்தின் போது மருத்துவர்களுக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும், அனைத்து மருத்துவமனைகளிலும், புகார் பெட்டிகள் வைத்து புகார்களை பெறுவதன் மூலம் குற்றங்களை தடுக்க முடியும் என அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.