சேலம்: மாணவர்களுக்கு எதிராக தனியார் தொழில் முதலாளிகளுடன் இணைந்து பிடெக் இம்மெர்சிவ் டெக்னாலஜி, பிஎஸ்ஸி இம்மெர்சிவ் டெக்னாலஜி போன்ற டெக்னாலஜி பாடப்பிரிவுகளைக் கொண்டு வரத் துடிக்கும் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் அருண்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் புதிய பாடப்பிரிவுகளை தனியாருடன் இணைந்து துவங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது கல்வியை வியாபாரமாக்கும் ஒரு முயற்சியாகும். ஆட்சிக் குழுவில் இந்த பொருளை ஆதரித்த அரசு வழி ஆசிரிய பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வி தனியார் மயமாக்கப்படுவதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. கல்வி தனியார் மயமானால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும், இட ஒதுக்கீட்டு முறை சரியாக பின்பற்றப்படாது. கல்விக் கட்டணம் மிக அதிகமாக இருக்கும். ஆகையால், இதனைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
இக்கல்வியாண்டு பாடங்கள் அனைத்து துறைகளிலும் முடிக்கப்பட்டுவிட்டன. பல்கலையில் கல்வியாண்டு ஜுலை முதல் ஏப்ரல் வரை ஆகும். ஆனால், ஏப்ரல் 15 தேதியாகியும் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.
இதையும் படிங்க: 300 வீடுகளுக்கு வக்ஃப் வாரியம் நோட்டீஸ்: ''நிலம் யாருக்கு சொந்தம்?" - மாவட்ட ஆட்சியர் விளக்கம்! |
துணை வேந்தர் மே 19 அன்றுடன் பணி நிறைவு பெறுவதால், அவரை வழியனுப்ப மாணவர்கள் இருந்தால் தான் ஆசிரியர்கள் இருப்பார்கள் என்ற குறுகிய நோக்கத்திற்காக தேர்வை மே மாதத்திற்குத் தள்ளி வைத்திருப்பதாக அறிகிறோம். மே மாதம் தேர்வு நடத்தினால் ஜூலையில் தான் தேர்வு முடிவு வெளிவரும். இதனால் மேற்படிப்பிற்கு மாணவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே, ஏப்ரல் மாதத்திற்குள் பருவத் தேர்வினை நடத்தி முடிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் மாணவர்கள் நலன் கருதி தேர்வினை ஏப்ரலுக்குள் முடித்திட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் பல்கலைக் கழக நிர்வாகத்தையும் தமிழக அரசையும் கேட்டுக் கொள்வதுடன், உயர் கல்வித்துறையின் கூடுதல் செயலாளர் பழனிச்சாமி விசாரணை அறிக்கையினை விரைந்து வெளியிட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு பல்கலைக் கழக வேந்தர் மற்றும் தமிழ்நாடு அரசை இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்டத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.