திருச்சி: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரை தினமும் இயக்கப்படும் ரயில் தான் சேது எக்ஸ்பிரஸ் ஆகும். இந்த ரயிலானது புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் மற்றும் விழுப்புரம் வழியாக சென்னையைச் சென்றடையும். இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட ரயிலானது, இன்று அதிகாலை 1.10 மணி அளவில் திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்தது.
தொடர்ந்து, அங்கிருந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி புறப்பட்ட பொழுது, ரயிலில் இருந்த கடைசி மூன்று (மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுப்பெட்டிகள்) பெட்டிகள் எதிர்பாராத விதமாக கழன்றுள்ளது. இதனால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. நடைமேடையில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால், உடனடியாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் விரைந்து ரயில் பெட்டியை இணைக்கும் பனியில் ஈடுபட்டனர்.
சுமார் 30 நிமிடத்திற்குப் பிறகு கழன்ற 3 பெட்டிகளும் ரயிலுடன் இணைக்கப்பட்டது. பின்னர், ரயிலானது திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்னையைச் சென்றடைந்தது. ரயில் பெட்டி எந்த காரணத்தால் கழன்றது என்பது குறித்து திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவமானது திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்து சிறிது தூரத்தில் நிகழ்ந்துள்ளதால் அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: செங்கோட்டை - ஈரோடு, மயிலாடுதுறை ரயில் பயணிகள் கவனத்திற்கு.. மதுரை ரயில்வே கோட்டம் முக்கிய அறிவிப்பு!