By சி. உசேன்
சென்னை: தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்த 10 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்தி வருவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு, '' ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது. 10 மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகிறது. மேலும், ஆளுநர் ரவி நல்லெண்ணத்துடன் செயல்படவில்லை. மசோதாக்கள் ஆளுநரிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும்'' என தீர்ப்பளித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என புகழ்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி. மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவத்துக்காக திமுக தொடர்ந்து போராடி வெல்லும்'' என்று சட்டப் பேரவையில் நேற்று பெருமிதத்துடன் கூறியிருந்தார்.
ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியா முழுக்க பேசுபொருளான நிலையில், இந்த தீர்ப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் என். ராம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
ஆளுநர் முன்னுள்ள மூன்று வாய்ப்புகள்
அப்போது பேசிய அவர், "ஒரு மாநில ஆளுநரின் அதிகாரம் என்ன? என்பது குறித்து பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. ஆளுநருக்கு சொந்த அதிகாரம் பெரிதாக இல்லை என்றும், மாநில அரசு கூறுவதை கேட்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெளிவாக கூறியுள்ளனர்.
ஒரு மசோதா ஆளுநரின் மேசைக்கு சென்றால் அவர் முன் 3 வாய்ப்புகள் உள்ளன.
1) அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது.
2) ஒப்புதல் தராமல் நிறுத்தி வைப்பது, அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (as soon as possible) தான். அதில் திருத்தங்கள் தேவைப்பட்டால் அவற்றை குறிப்பிட்டு மசோதாவை மீண்டும் சட்டசபைக்கு அனுப்ப வேண்டும்.
3) அரிதான வழக்கு அல்லது உயர் நீதிமன்றம் அதிகாரத்தை குறைப்பது போன்ற மசோதாக்களாக இருந்தால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்'' என்றார் என்.ராம்.
குறிப்பாக ஆளுநர் ஒரு மசோதா மீது நடவடிக்கை எடுப்பதற்கான காலத்தை நீங்கள் சொல்வது போல ''as soon as possible'' என்றால் எவ்வளவு நாட்கள்? என்று கேட்டதற்கு, '' கால அவகாசம் என்பது 2 வருடமோ, 5 வருடமோ அல்ல. உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறிய என்.ராம், நீதிமன்றம் முதன்முறையாக காலவரம்பு கொடுத்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.
அதாவது, ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ''மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநர் முடிவு செய்தால் அதை ஒரு மாதத்திற்குள் செய்ய வேண்டும். மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தால், அதனை அதிகபட்சம் 3 மாதங்களுக்குள் செய்ய வேண்டும்'' என தெளிவுபடுத்தியுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ''10 மசோதாக்களில் பழைய மசோதாவான மீன்வளப் பல்கலைக்கழகத்தை ஜெயலலிதா பெயரில் மாற்றும் மசோதாவையும் ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தார். இது போன்ற 10 மசோதாக்களை ஆளுநர் தன் பாக்கெட்டில் போட்டு வைத்துக் கொண்டார். இதனை சட்டவிரோதமானது என்றும் முற்றிலும் தவறான போக்கு எனவும் நீதிமன்றம் கூறிவிட்டது. 10 மசோதாக்களை உச்ச நீதிமன்றமே சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சட்டமாக்கியுள்ளது. இது போன்று இதுவரை நடந்துள்ளதா? என தெரியவில்லை.
இந்த தீர்ப்பு அனைத்து ஆளுநர்களையும் கட்டுப்படுத்தும்
ஆளுநர் ஆர்.என்.ரவியால் இனி பல்கலைக்கழக வேந்தராக இருக்க முடியாது. இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. இது தமிழ்நாடு மக்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியா முழுமைக்கும் கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்க வேண்டும். ஆளுநரால் இனி இதுபோன்ற செயல்களை எதுவும் செய்ய முடியாது. தமிழ்நாடு பெயரை மாற்றுவதாக கூறியவர் தான் இந்த ஆளுநர். மாநில அரசை நேரடியாக தாக்கி பேசுகிறார். மத்திய அரசின் ஏஜெண்டாக இந்த ஆளுநர் (ஆர்.என்.ரவி) இருப்பதால் மத்திய அரசுக்கும் இந்த தீர்ப்பு தோல்வி தான்.
'அரசியலமைப்புச் சட்டம் எவ்வளவு நல்ல சட்டமாக இருந்தாலும் அதை வழிநடத்துபவர்கள் சரியில்லை என்றால் சட்டம் மோசமானதாக மாறிவிடும்' என அம்பேத்கர் கூறியுள்ளார். தனக்கு அதிகாரம் இருப்பதாக நினைத்து தனி அரசு நடத்த ஆளுநர் நினைக்கிறார். ஆளுநர், அண்ணாமலை இருக்கிற வரை நமக்கு நல்லது என தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கெனவே கூறியுள்ளார். தமிழ்நாடு ஆளுநருக்கு தன்மானம் இருந்தால் பதவியை அவர் ராஜிநாமா செய்ய வேண்டும். அது நடக்கவில்லை என்றால் மத்திய அரசு ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆளுநருக்கு பெரிதாக வாய்ப்பில்லை. இந்த தீர்ப்பு அனைத்து மாநில ஆளுநர்களையும் கட்டுப்படுத்தும்.'' என்றார் என்.ராம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்