சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பிறந்த நாளை முன்னிட்டு அவரை வாழ்த்தும் வகையில் காங்கிரஸ் மாநில செயலாளர் ஷெரீஃப் என்பவர் சென்னை மாநகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி இருந்தார். அந்த போஸ்டரில் ''ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு'', ''2026ன் துணை முதல்வரே'' என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த போஸ்டர் விவகாரம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வட்டாரம் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை கிளப்பி உள்ளது. ஏற்கெனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்கிற கருத்தை முன்வைத்து பேசி வருகிறார். விசிகவின் இக்கோரிக்கை அவ்வப்போது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் செல்வப்பெருந்தகையை ஒருப்படி மேலே போய் ''துணை முதல்வரே'' என்று வர்ணித்து காங்கிரஸ் கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர் காங்கிரஸ் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாட்டில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுக தரப்பில் இருந்து இன்னமும் எதிர்வினை கிளம்பாத நிலையில் அதற்கு முன்பு செல்வப்பெருந்தகை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் பொறுப்பு வகிக்கும் ஏ.வி.எம். ஷெரிப் ஆகிய தங்களது பெயர் தாங்கிய ஒரு சுவரொட்டி எனது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மாநகரில் சில இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்தியா கூட்டணியை சீர்குலைக்கும் முயற்சியில் பல்வேறு மதவாத தீய சக்திகள் கருமேகக் கூட்டம் போன்று சூழ்ந்து வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் இந்த மதவாத தீய சக்திகள் கூடுதலாக நமது ஒற்றுமையை குலைக்க பல்வேறு சதித் திட்டங்களை தீட்டி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஒற்றுமையாக இருக்கும் காங்கிரஸ் -திமுக கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் நோக்கத்தோடும், ஒற்றுமையை கெடுக்கின்ற வகையிலும் ஒட்டப்பட்டு உள்ள சுவரொட்டியில் தங்களுடைய வாசகங்கள் இடம் பெற்றுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். கூட்டணிக் குறித்து பேச அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமே அனைத்து அதிகாரமும் உள்ளது. உங்களுடைய அநாகரிகமான செயல் கட்சி கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீறியதோடு, ஒரு ஒழுங்கீனமான செயலாகும்.
இதையும் படிங்க: ''பாமக ரூல்ஸ்படி நானே தலைவர்" - அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு; கட்சி வட்டாரத்தில் உச்சக்கட்ட பரபரப்பு!
நான் ஏற்கெனவே அறிவித்துள்ளபடி நம்முடைய மூத்த தலைவர் இலக்கியச் செல்வர் டாக்டர் குமரி அனந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 7 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனது பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என என்னை சந்தித்தவர்களிடம் நான் தெளிவாக கூறியுள்ளேன். மேலும் நான் எந்த காலத்திலும் எனது பிறந்தநாளை கொண்டாடியதில்லை. எனது பிறந்தநாளை முன்னிட்டு தங்களுடைய சுவரொட்டி விளம்பரம் கண்டிக்கத்தக்கதோடு ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்பட்டதாகும். உங்களுடைய செயலுக்கு தகுந்த விளக்கத்தை 15 தினங்களுக்குள் எழுத்துப்பூர்வமாக நேரில் வந்து விளக்க வேண்டும். தாங்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமையுடன் கலந்து பேசி உங்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.'' என்று செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
பிறந்தநாள் போஸ்டர் என்ற பெயரில் கோர்த்து விட்ட தொண்டரால் குழப்பம் நிலவி வரும் நிலையில் செல்வப்பெருந்தகை மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை சாட்டையை சுழற்றும் விதமாகவே அமைந்துள்ளது.