சென்னை: ராமாபுரத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை மாநகர போலீசார் போதைப்பொருள், போதை மாத்திரைகள் புழக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சென்னை மாநகரம், ஆவடி, தாம்பரம் ஆகிய காவல் ஆணையகத்தின் கீழ் வரும் அனைத்து காவல் நிலையங்களும் ஒருங்கிணைந்து சென்னை, புறநகர் பகுதிகளில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர். இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணிகளிலும், வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை ராமாபுரம் பகுதியில் மாணவர்கள், இளைஞர்களைக் குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் தனிப்படைப் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ராமாபுரத்தில் குறிப்பாக கங்கை அம்மன் கோயில் தெரு பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்தது.
இதையும் படிங்க: காவல் நிலைய கழிவறைகளில் கைதிகள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்? நீதிபதிகள் கேள்வி!
இதன் படி அந்தப் பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்களின் பெயர் சதீஷ்குமார், ஆகாஷ் என்பது தெரியவந்தது. போலீசார் விசாரணையின் போது தொடக்கத்தில் மழுப்பலாக அவர்கள் பதில் அளித்தனர்.
எனினும் போலீசார் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது 40 போதை மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்ததில், மௌலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்பவரிடம் இருந்து இந்தப் போதை மாத்திரைகளை பெற்றதாக தெரிவித்திருக்கின்றனர். இதனை அடுத்து போலீசார் மெளலிவாக்கத்தில் சஞ்சய் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 160 போதை மாத்திரைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், மும்பை சென்று போதை மாத்திரைகளை வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.