திருச்சி: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் டி.ஐ.ஜி வருண் குமார் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஏப்ரல் 8) திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நேரில் ஆஜரானார்.
இவ்வழக்கில் டிஐஜி வருண் குமார் தரப்பு விளக்கம் ஏற்கனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அதன் ஆதாரங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று சீமான் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து 6 ஆதாரங்களை அரை மணி நேரத்தில் சீமானிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். ஆதாரங்களை பெற்றுக் கொண்ட பின்னர் கையெழுத்து போட்டு செல்லுமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பின்னர் வெளியே வந்த சீமான் செய்தியாளர்களிடம் கூறும் போது, ''கியாஸ் விலை 50 ரூபாய் உயர்த்தி இருப்பதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எனக்கு ரொம்ப நெருக்கமானவர். கட்சி வேறு. கொள்கை வேறு. நானும், அண்ணாமலையும் எதிரியாக இருக்க வேண்டுமா? சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.
அதே போன்று அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் சாமி ரவி, திண்டுக்கல் துரை ஆகியோரை என்கவுன்ட்டர் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அனைத்து என்கவுன்ட்டர்களும் போலியானது. உண்மையான குற்றவாளிகளை கண்டறியாமல் வழக்கை முடிப்பதிலேயே காவல்துறை முனைப்பு காட்டுகிறது.
யார் வேண்டுமானாலும் எந்த மொழி வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதே எனது நிலைப்பாடு. ஆனால் தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழ் எனக்கு உயிர் மூச்சு. நான் இதுவரை யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிட்டு வருகிறேன். வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் இதே நிலைபாடு தான். நான் கூட்டணி வைக்கப் போவதே அமெரிக்க அதிபர் ட்ரம்புடன்தான்.
அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் அமலாக்கத் துறை சோதனை தொடர்பாக கேட்கிறீர்கள். தேர்தல் நேரங்களில் இது போன்று சோதனை நடத்துவது வாடிக்கையான ஒன்று தான். தமிழக ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை என அன்றிலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதைத்தான் இன்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது." என சீமான் கூறினார்.
'சீமான் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்' - வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன்!
டி.ஐ.ஜி வருண்குமார் தரப்பு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் கூறும்போது, ''டிஐஜி வருண்குமார் மற்றும் சீமான் ஆகியோர் இன்று ஆஜராகினர். வழக்கு விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் அனைத்தையும் சீமான் தரப்பு வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்க கூறியதன் பேரில் இன்று ஒப்படைத்தோம். வருகின்ற 29ஆம் தேதி வாய்தா போடப்பட்டுள்ளது.
வழக்கின் விவரங்கள், முக்கிய ஆவணங்கள் பென்டிரைவ் உள்ளிட்டவைகளை நாங்கள் அளித்துள்ளோம். அவர்கள் பார்த்துவிட்டு அதற்கு பதில் அளிப்பதற்காக இந்த நடைமுறை செய்யப்பட்டுள்ளது. வருகிற 29 ஆம் தேதி கட்டாயம் சீமான் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் கூறவில்லை. என்றாலும் வாய்தா என்றாலே அப்போது இரு தரப்பினரும் ஆஜராக வேண்டும்.
இதையும் படிங்க: "ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் கிடைக்குமா?" எம்எல்ஏ-வின் கேள்விக்கு அவையில் அமைச்சர் அளித்த அசத்தல் பதில்!
கடந்த வருடம் சீமான் டிஐஜி வருண்குமாரை பற்றியும், அவரது குடும்பத்தினரை பற்றியும் பேசிய விஷயங்கள் வீடியோவாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும், பத்திரிகை செய்தி வாயிலாகவும் வந்ததை அடுத்து இது தொடர்பாக சீமான் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டு இருந்தோம். அதனை சீமான் செய்யவில்லை என்பதால் இந்த வழக்கு தொடரப்பட்ட நடைபெற்று வருகிறது.
வருண் குமார் அரசு உயர் அதிகாரி. அவருக்கு பல்வேறு பணியிருக்கும். அவர் தன்னுடைய கடமையை சரியாக செய்து வருகிறார். அதன் விளைவாக தான் அவர் தற்போது நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய பணியில் விடுப்பு எடுத்து இதுதொடர்பாக அலைந்து கொண்டிருக்கிறார். அனைத்து வாய்தாவுக்கும் தவறாமல் வந்தவர் அவர்'' என்று வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்