மதுரை: முருகபக்தர்கள் மாநாடு நடந்த அனுமதி கோரி தாக்கல் செய்யபட்ட வழக்கில் காவல் துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி புகழேந்தி கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த முத்துக்குமார், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
இந்து முன்னணி அமைப்பு சார்பில் வருகிற ஜூன் மாதம் 22-ம் தேதி மதுரை ரிங் ரோடு, பாண்டிகோவில் அருகில் உள்ள அம்மா திடலில் ‘முருக பக்தர்களின் ஆன்மீக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த வளாகத்திற்குள்,
முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைக்கப்பட உள்ளது. இந்த தற்காலிக மாதிரி கோயில்களை 10ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பக்தர்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தோம். ஆனால் அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். எனவே, உரிய அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்,"என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "முருக பக்தர்களின் ஆன்மீக மாநாடு நடைபெறுவதற்கு 10 நாள் முன்னதாக மாநாடு நடைபெறும் வளாகத்தில்
முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோயில்களின் தற்காலிக மாதிரிகள் அமைத்து, அதனை பக்தர்கள் வழிபட அனுமதி அளித்தால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு ஏற்படும்.
மேலும், முருக பக்தர்களின் ஆன்மீக மாநாட்டிற்கு அனுமதி கோரிய மனு தற்போது வரை நிலுவையில் உள்ளது.
மாநாட்டிற்கு அனுமதி கோரிய மனு மீது காவல்துறையின் சார்பில் சில விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளது. காவல்துறை எழுப்பிய சந்தேகங்களுக்கு மாநாடு ஏற்பாட்டாளர்கள் இதுவரை அளிக்க வில்லை. எனவே, இது குறித்து 9ஆம் தேதிதான் முடிவு எடுக்க உள்ளோம். எனவே, மாநாட்டுக்கு முன்னதாக இது போன்று தற்காலிக கோயில்கள் அடங்கிய அரங்கு அமைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது,"என கூறினார்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயில்களில் குடமுழுக்கு விழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு!
இதை தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "அறுபடை வீடு திருக்கோயில்கள் அடங்கிய மாதிரி அரங்கில் காலை, மாலை தலா 2 மணி நேரம் மட்டும் வழிபாடு நடத்தப்படும். எனவே, உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்,"என்று வாதிட்டார்.
இதை தொடர்ந்து நீதிபதி புகழேந்தி,"மனுதாரர் குறிப்பிடும் பகுதியில் பிற மாநாடுகள் நடைபெற்றுள்ளன. எனவே இந்த மாநாட்டுக்கு தற்போது அனுமதி தர மறுப்பது ஏன்?. அறுபடை வீடு திருக்கோயில்கள் மாதிரி அரங்கு அமைத்து வழிபாடு நடத்த உள்ளனர். இதற்கு அனுமதி மறுத்து அரசு தரப்பில் கூறிய காரணங்கள் ஏற்புடையது அல்ல. நாம் ஜனநாயக நாட்டில் தான் உள்ளோமா, மக்களுக்கு உரிமை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. காவல் துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அரசியல் சார்புடன் செயல்பட கூடாது,"என கூறினார். மனுதாரரின் கோரிக்கை குறித்து, மதுரை மாநகர் காவல் ஆணையர், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 9 ம் தேதி ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.