புதுடெல்லி: அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள அகதிகளுக்கு இடம் அளிக்கும் நாடாக இந்தியா திகழப்போகிறதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்ததவர் என்பதாக சந்தேகிக்கப்படும் வழக்கில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தமிழர் ஒருவர் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டார். சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் 2018ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் இலங்கை தமிழரின் தண்டனை காலத்தை 10 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாகக் குறைத்து உத்தரவிட்டது.
தண்டனை காலம் முடிவடைந்ததும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று இலங்கை தமிழருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான நடைமுறைகள் முடியும் வரை அகதிகள் முகாமில் தங்கியிருக்கும்படியும் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இலங்கை தமிழரின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவானது நீபதிகள் தீபங்கர் தத்தா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "இலங்கை குடியுரிமை பெற்ற ஒருவரை அகதியாக அனுமதிக்கக் கோரும் மனுவை ஏற்க முடியாது,"என்று கூறினர்.
அப்போது குறுக்கிட்ட இலங்கை தமிழரின் வழக்கறிஞர், "எனது கட்சிக்காரர் உரிய விசாவோடுதான் இந்தியாவுக்கு வந்தார். ஆனால், இப்போது அவர் இலங்கை சென்றால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று எனது கட்சிக்காரர் அச்சம் தெரிவிக்கிறார்,"என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி தீபங்கர் தத்தா, "உலகம் முழுவதும் உள்ள அகதிகளை இந்தியா அனுமதிக்கிறதா? இந்தியாவானது 140 கோடி மக்கள் தொகையால் ஏற்கனவே போராடிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள வெளிநாட்டு நபர்களை அகதிகளாக அனுமதிக்கும் வகையிலான தர்மசத்திரமாக இந்தியா இல்லை. இங்கேயே தங்கியிருப்பதற்கு மனுதாரருக்கு என்ன உரிமை உள்ளது,"என்று கேட்டார்.
அப்போது இலங்கை தமிழரின் வழக்கறிஞர், "மனுதாரரின் மனைவி, குழந்தைகள் இந்தியாவில் இருக்கின்றனர். மூன்று ஆண்டுகளாக அவர் சிறையில் இருந்தார். அவரை திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகள் இன்னும் தொடங்கவில்லை,"என்று கூறினார்.
அப்போது நீதிபதி தீபங்கர் தத்தா, "அரசியல் சட்டத்தின் 19ஆவது பிரிவு இந்தியர்களுக்கு மட்டுமே பொருந்தும். சட்டத்தின்படி அவரை காவலில் வைக்கலாம். ஆனால், அவரது கைது என்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21 ஐ மீறுவதாக இருக்கக் கூடாது,"என்றார்.
அப்போது குறுக்கிட்ட இலங்கை தமிழரின் வழக்கறிஞர்,"எனது கட்சிக்காரர் இலங்கைக்கு திரும்பி செல்வது என்பது அவரது உயிருக்கு ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடும்,"என்றார். அப்போது உச்ச நீதிமன்றம், "உங்கள் கட்சிக்காரர், ஏதேனும் வேறு நாட்டில் தஞ்சம் கேட்டு அணுகலாம்,"என்று கூறியது. மேலும் இலங்கை தமிழரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.