சென்னை: எஸ்பிஐ வங்கிக் கிளையின் மரக்கதவு மற்றும் இரும்பால் ஆன கதவையும் வங்கி ஊழியர்கள் பூட்டாமல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவடி செக்போஸ்ட் அருகே, அரசு பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயின் (பாரத ஸ்டேட் வங்கி) கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில், ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவு எஸ்.ஐ. சிவக்குமார், ஆவடி சி.டி.எச் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குறிப்பிட்ட வங்கிக் கிளையை அவர் கடந்தபோது, வங்கியின் மரக்கதவு மற்றும் இரும்பால் ஆன கதவும் பூட்டாமல் இருந்ததை கவனித்துள்ளார்.
இதுகுறித்து வங்கியின் கிளை மேலாளர் பூபாலனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவரும், கடைநிலை ஊழியர் சுரேந்தரும் வங்கியில் ஆய்வு செய்தனர். அப்போது அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை என தெரிந்தது. விசாரணையில், நேற்றிரவு 7:30 மணியளவில் ஊழியர்கள் கவனக்குறைவாக வங்கியின் கதவுகளை பூட்டாமல் சென்றது தெரிய வந்தது.
இதையும் படிங்க: “இங்கிட்டு வேணாம், அங்கிட்டு கொடுங்க” தஞ்சையில் நூதன முறையில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர்! |
மேலும் விசாரணையில், வங்கியில் 3000 -க்கும் மேற்பட்டோர் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர் என்பதும், நேற்று மட்டும் வங்கியில் 50 லட்சம் ரூபாய் இருப்பு இருந்ததாகவும் தெரிய வந்தது. உரிய நேரத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டதால், அதிர்ஷ்டவசமாக வங்கியில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் திருடு போகாமல் தப்பியது.
இந்நிலையில், வங்கிக்கு முழு நேர காவலாளி நியமிக்கப்பட வேண்டும் என்று காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டார். மேலும் ரோந்து பணியின்போது சிறப்பாக செயல்பட்ட காவல் துணை ஆய்வாளர் சிவகுமாரை அவர் வெகுவாக பாராட்டினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்