சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கரின் வீட்டில் சாக்கடை கழிவு கொட்டப்பட்ட விவகாரம் குறித்து சிபிசிஐடி 12 வாரத்தில் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் 24-ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் தாமோதரமூர்த்தி தெருவில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் வீட்டில் புகுந்த தூய்மை பணியாளர்கள் உடை அணிந்த நபர்கள், சாக்கடை கழிவுகளை கொட்டி சென்றதோடு, வீட்டில் இருந்த சங்கரின் தாய் கமலாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோசமான வார்த்தைகளில் வசைபாடியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கமலாவிடம் மோசமான வார்த்தைகளைக் கூறி அநாகரிகமாக நடந்த சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வீட்டில் கழிவுகள் கொட்டப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி காவல்துறை இயக்குநர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், காவல்துறை விசாரணையில் தங்களுக்கு நியாயம் கிடைக்காது. சம்மந்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகவே காவல்துறை செயல்டுவதால் விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என சங்கரின் தாய் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் கீழ்பாக்கம் காவல் ஆய்வாளரிடம் பேசும் காணொளியில், காவல்துறை உதவியுடன் திட்டமிட்ட சம்பவ நடைபெற்றது தெரிகிறது. அதனால், காவல்துறை விசாரணை செய்தால் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்தார்.

அடுத்ததாக காவல்துறை தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், வழக்கு உடனடியாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டு, வாக்குவாதத்தில் சம்மந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி சான்றுகள் அளித்தார்.
இதையும் படிங்க |
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 15 நாட்களுக்குள் வழக்கு பதிந்து விட்டு, விசாரணை சரியில்லை எனக் கூறி, சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற முடியாது. சி.பி.சி.ஐ.டி 12 வாரத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.
சவுக்கு சங்கர் விவகாரம்
ஆளும் தி.மு.க அரசை தான் பங்கேற்கும் யூடியூப் உரையாடல்களில் கடுமையாக விமர்சித்து வந்த சவுக்கு சங்கர், சமீபத்தில் பெண் காவலர்கள் குறித்து தவறாகப் பேசியதாக கைது செய்யப்பட்டார். பின்னர், பிணையில் வெளியே வந்த அவர், தனக்கு சொந்தமான ‘சவுக்கு மீடியா’ யூடியூப் பக்கத்தில் ஆளும் அரசை விமர்சித்து பல காணொளிகளை வெளியிட்டார்.
இந்த சூழலில், அவரது வயதான தாய் மட்டும் வீட்டில் இருந்த நேரத்தில், தூய்மைப் பணியாளர்கள் உடையில் வந்த 20-க்கும் மேற்பட்ட நபர்கள், சாக்கடை கழிவுகளை வீசிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவரது வீட்டிற்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் உடையில் இருந்த நபர்கள், காவல்துறையினரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற காணொளியும் சமூக வலைத்தளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.