சேலம்: சேலம் மாநகராட்சி, 20 ஆவது கோட்டத்திற்கு உட்பட்ட ரெட்டிப்பட்டிப் பகுதியில் குப்பையில் கிடந்த 12 சவரன் தங்க செயினை போலீசாரிடம் ஒப்படைத்த 'தங்க மனசுக்கார' தூய்மை பணியாளருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
சேலம் மாநகர், சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல். இவர், கடந்த 15 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் சேலம் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று (மே 19) வழக்கம் போல் மணிவேல் சேலம் மாநகராட்சி, 20 ஆவது கோட்டத்திற்கு உட்பட்ட ரெட்டிப்பட்டிப் பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த குப்பையில் பளபளப்பாக மின்னிய நிலையில் செயின் ஒன்று கிடந்துள்ளது. அதை கையில் எடுத்து பார்த்தபோது தங்கம் என்பது தெரிய வந்து மணிவேல் இன்ப அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும் 'தரையில் கிடந்தது தனக்கே உரியது" என்று நினைக்காமல் உடனடியாக அதனை கொண்டு வந்து சூரமங்கலம் காவல் நிலைய ஆய்வாளரிடம் மணிவேல் ஒப்படைத்தார்.
இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய காவல் துறையினர் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர். தூய்மை பணி செய்த போதும், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் நேர்மையை கடைபிடித்த தூய்மை பணியாளர் மணிவேலுவுக்கு காவல்நிலைய போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: பக்கத்து வீட்டுக்காரர் வெளியூர் சென்ற தருணத்தில் 20 சவரன் நகைகளை திருடி மின்னல் வேகத்தில் விற்பனை: பலே மூதாட்டி கைது!
இதைத் தொடர்ந்து போலீசார் அந்த நகை யாருடையது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ரெட்டிபட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பொமிலா என்பவர் தனது 12 சவரன் செயின் காணாமல் போனது தொடர்பாக சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்தது தெரிந்தது.
எனவே போலீசார் விசாரணைக்கு பின்னர் 12 சவரன் தங்க செயின் பொமிலாவிடம் ஒப்படைத்தனர். இந்த செய்தி வைரலாக பரவியதைத் தொடர்ந்து தூய்மை பணியாளர் மணிவேலுவுக்கு சமூக வலைதளவாசிகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.