சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
இவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், இவர்களின் அனைத்தும் முயற்சிகளும் தோல்வி அடைந்து வருவதால் கட்சியில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. தந்தை, மகன் ஆகிய இருவரில் யாரை ஆதரிப்பது? என்று தெரியாமல் கட்சியினர் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இதற்கிடையே அன்புமணி ஆதரவு நிலைப்பாடு எடுத்த பாமகவின் பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட 41 மாவட்ட நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கி விட்டு, தனது ஆதரவாளர்களை நியமித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கடந்த மே மாதம் 16 ஆம் தேதி முதல் நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து ராமதாஸ் ஆலோசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று (ஜூன் 8) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது மகள் இல்லத்தில் தங்கி உள்ள பாமக நிறுவனர் ராமதாசை முகுந்தன் சந்தித்து பேசினார்.
இதன் பிறகு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ''நல்ல செய்தி விரைவில் வரும். அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்திருக்கலாம்.
அரசியலுக்கு வயது முக்கியம் இல்லை. வயது வெறும் எண்கள் தான். கலைஞர் 94 வயதிலும் சக்கர நாற்காலியில் முதல்வராக இருந்தார். மகாதீர் 92 வயதிலும் மலேசியா பிரதமராக இருந்தார்.
ஏன் வயது விவகாரம் குறித்து பேசுகிறீர்கள்? யாருக்கான செய்தி இது? 86 வயது வரபோகுது. ராமதாசுக்கு ஏன் இதெல்லாம் என்று பேசக்கூடிய செய்தி வருவதால் இதை சொன்னேன்.
எல்லா தலைவர்களையும் நேசிப்பவன். பிரதமரும் நல்ல நண்பர். மோடி, அமித் ஷா இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கிறார்கள் வாழ்த்துகள்.
பாமகவினருக்கு சோர்வு வராது. அவர்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். கூட்டணி யாரோடு? எப்போது? எப்படி? ஏன்? இந்த கேள்விகளுக்கு பதில் இப்போது சொல்ல முடியாது. 3 மாதங்கள் ஆகும். உங்க கேள்விக்கு பதில் கிடைக்கும்.
தேசிய கட்சி, மாநில கட்சி எவையோடும் கூட்டணி இருக்கலாம். நாட்டில் யார் வேண்டும் என்றாலும் கட்சி துவங்கலாம். வாழ்த்துகள் சொல்லிவிட்டேன்.
விஜய் யாருடன் கூட்டணி செல்வார் என்பது குறித்து எனக்கு ஜோசியம் சொல்ல தெரியாது. முதலிலேயே தெரிந்து இருந்தால் டாக்டருக்கு பதிலாக ஜோசியம் படித்திருப்பேன். கட்சி இறங்குமுகத்தில் இருப்பதை ஏற்ற வேண்டும். அதற்கான வேலை நடக்கிறது.
இதையும் படிங்க: 'நமசிவாயா' - பக்தி பாடல் வெளியிட்ட இளையராஜா பேரன் 'யத்தீஸ்வர் ராஜா'!
சென்னையிலும் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்து பேசினேன். அன்புமணியுடன் பேசினேனா? உடன்பாடு எட்டப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை கேட்கிறீர்கள். அவை ரகசியம்.
முகுந்தன் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா? என்று கேட்கின்றீர்கள். வாய்ப்பு இருக்கு, இல்லை என சொல்ல முடியாது. வாய்ப்பு வரும். அரசியல் நீண்ட பயணம். அதில் இவை எல்லாம் நடைபெற தான் செய்யும்." என்று ராமதாஸ் கூறினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.