சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
இவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இவர்களின் அனைத்தும் முயற்சிகளும் தோல்வி அடைந்து வருவதால் கட்சியில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. தந்தை, மகன் இருவரில் யாரை ஆதரிப்பது? என்று தெரியாமல் தவிப்புக்கு கட்சியினர் ஆளாகி வருகின்றனர்.
இதற்கிடையே அன்புமணி ஆதரவு நிலைப்பாடு எடுத்த பாமகவின் பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட 41 மாவட்ட நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கிவிட்டு தனது ஆதரவாளர்களை நியமித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கடந்த மே மாதம் 16 ஆம் தேதி முதல் நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து ராமதாஸ் ஆலோசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 5) தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டுக்கு அன்புமணி ராமதாஸ் காரில் வருகை தந்தார். தைலாபுரம் வீட்டில் 50 நிமிடம் இருந்த அன்புமணி காலை 10 மணி அளவில் அங்கிருந்து வெளியேறினார். ராமதாஸை சந்தித்து பேசியதாக ஒரு தரப்பு, குடும்ப உறுப்பினர்களை மட்டும் சந்தித்து பேசிவிட்டு சென்றதாக மற்றொரு தரப்பு கூறுகிறது.
அன்புமணி கார் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து புதுச்சேரியை நோக்கிச் சென்ற நிலையில், சென்னையில் இருந்து ஆடிட்டர் குருமூர்த்தி, சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் காலை 10.05 மணிக்கு வருகை புரிந்தனர். அவர்கள் இருவரும் தைலாபுரம் தோட்டத்திற்குள் ஓரே காரில் சென்றனர்.
பின்னர் இருவரும் ராமதாஸை சந்தித்து 3 மணி நேரம் ஆலோசனை நடத்திவிட்டு மதியம் 1.15 மணிக்கு வெளியே வந்தனர். அப்போது ஆடிட்டர் குருமூர்த்தி கூறும்போது, "ராமதாஸ் என்னுடைய நீண்ட கால நண்பர். என்னை அவருக்கும் பிடிக்கும் என்பதால் நீண்டநேரமாக பேசினார்." என்று கூறிவிட்டு சென்றிருந்தார்.
இந்த பரபரப்பான சூழலில் பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் வீட்டில் இருந்து சென்னை அபிராமபுரம் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு இன்று (ஜூன் 7) வருகை தந்தார்.
அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஆடிட்டர் குருமூர்த்தியை நான் ரொம்பவும் மதிக்க கூடியவன். எனக்கும், அவருக்கும் நீண்ட நாட்கள் நட்பு உண்டு.
சைதை துரைசாமி எனக்கு 30 ஆண்டு கால நண்பர். நேற்று திண்டிவனத்தில் உள்ள தைலாபுரத்தில் வந்து என்னை சந்தித்தார்கள். அன்புமணியும் அங்கு வந்தார். என்னையும் வந்து பார்த்தார்.
பல் சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர் பாலாஜியை சந்திப்பதற்காகவே, சென்னைக்கு வந்துள்ளேன். யாரையும் திட்டமிட்டு சந்திப்பதற்காக நான் சென்னைக்கு வரவில்லை." என்று ராமதாஸ் கூறினார்.
அப்போது செய்தியாளர்கள், ''மருத்துவர் அன்புமணிக்கும், உங்களுக்கும் இடையே காம்ப்ரமைஸ் செய்து கொள்வதற்கு வந்துள்ளீர்களா?" என்கிற கேள்வியை எழுப்பினர்.
அதற்கு ராமதாஸ், ''காம்ப்ரமைஸ் என்பது பெரிய வார்த்தை. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருவது குறித்து எனக்கு தெரியாது. கூட்டணி குறித்து நான் நினைத்துகூட பார்க்கவில்லை.
ராஜினாமா செய்துள்ள முகுந்தனுக்கு பொறுப்புகள் நிறைய உள்ளது. அவர், தொழில் செய்வதில்தான் விருப்பமாக உள்ளார். எனக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் இடையே நிலவும் கருத்து மோதலால் கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை.
கமல் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட முடியாதது குறித்து நான் பதில் சொன்னால் நன்றாக இருக்காது. உலகத்தில் எல்லாவற்றிற்கும் தீர்வு உள்ளது. தீர்வு இல்லாமல் எதுவும் இல்லை.
கூட்டணி பேசுவதற்காக முடிவு செய்வதற்கும் சரியான நேரம் இதுவல்ல. அதேசமயம் கூட்டணி குறித்து பேசி தான் முடிவு செய்கின்றோம். முடிந்து போன விஷயத்தை பற்றி பேச வேண்டாம். இனி நடக்கப் போகும் விஷயத்தை மட்டும் பேசுவோம்.
இதையும் படிங்க: "மாநிலங்களவை எம்.பி ஆகும் இன்பதுரை"; வாளு போய் கத்தி வந்த கதையாய்... 'அப்பாவு' நிலை!
பின்னடைவை ஊடகங்கள்தான் ஒன்று இரண்டு கூட்டிச் சொல்கிறீர்கள். அன்புமணிக்கு கட்சித் தலைவர் பதவி கொடுக்கப்படுமா? என்பது குறித்து பின்னர் சொல்கிறேன்.
குருமூர்த்தி நல்லவர். நல்ல மனம் உடையவர். திறமை உடையவர். குருமூர்த்தி சொன்னால் நல்லது நடக்கும் என்று நான் நம்புகின்றேன். அதனால் அங்கு வந்து என்னை சந்தித்து பேசினார்.
2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி குறித்து என்னிடம் எதுவும் பேசவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் நாங்கள் எந்த கூட்டணியில் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த கூட்டணியில் இருப்போம்." என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.