கும்பகோணம்: இலவச கட்டாயக்கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கும் வகையில் 25 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்தின் வாயிலாக தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் 2025-26ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச கல்வி வழங்குவதற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சேர்க்கை நடைமுறை இதுவரை தொடங்கப்படவில்லை. பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஓவ்வொரு ஆண்டும் இதற்காக ஏப்ரல் முதல் வாரத்திலேயே அறிவிப்பினை தமிழக அரசு வெளியிடும். ஆனால் இந்த ஆண்டு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பள்ளிகள் திறக்க இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் குழந்தைகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ப்பதா அல்லது பிற அரசு பள்ளிகளில் சேர்ப்பதா என்பது குறித்து பெற்றோர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: கட்டுமான தொழிலாளர்களை விட குறைவான சம்பளம்! கௌரவ விரிவுரையாளர்கள் வேதனை!
இதற்கிடையே, ஆண்டு வருவாய் கணக்கு முடிப்பதற்கான ஜமாபந்தி நிகழ்வு தஞ்சை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. கும்பகோணம் தாலுகாவில் நடைபெறும் ஜமாபந்திக்கு திரண்டு வந்த ஏராளமான பெற்றோர், கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க நடவடிக்கை எடுக்கும் படி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் மனு அளித்தனர். அவரிடம் ஒவ்வொரு பெற்றோரும் தனித்தனியாக மனு அளித்தனர்.
கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி வழங்கப்படுகிறது. இதன்படி தனியார் பள்ளிகளில் உள்ள மொத்த இடங்களில் 25 சதவிகித இடங்களில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை சேர்க்க வேண்டும். இந்த சட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு வரை நான்கரை லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். இவ்வாறு தனியார் பள்ளிகள் அளிக்கும் இலவச கல்விக்கான செலவை, மாநில அரசுகள் அந்தந்தப் பள்ளிகளுக்கு வழங்கும்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.