திருநெல்வேலி: நெல்லை டவுன் பகுதியில் நிலம் பிரச்னை காரணமாக விருப்ப ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிசிலி அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறி, தச்சநல்லூர் பால் கட்டளையைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் டவுன் பகுதியைச் சேர்ந்த அக்பர் ஷா ஆகிய இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களைத் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் உடலை வாங்கப் போவதில்லை எனக் கூறி உயிரிழந்த ஜாகிர் உசேன் மகள் மற்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் சந்தோஷ் ஹடிமணி தலைமையில் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சூழலில் ஜாகிர் உசேன் மகன் இச்சூர் ரகுமான் சிங்கப்பூரில் இருந்து தந்தை உயிரிழந்த தகவல் கேட்டு தாயகம் திரும்பி வருகிறார். இந்நிலையில் அவர் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசிய அவர், “எனது தந்தையைக் கொலை செய்யப்பட்டதற்குக் காரணம் போலீசாரின் அலட்சியம்தான். மார்ச் 9 ஆம் தேதி எனது தந்தை கொலை மிரட்டல் குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது அவர் மீது எதிர்த்தரப்பில் அளித்த புகாரின் அடிப்படையில் பிசிஆர் வழக்குப்பதிவு செய்தனர்.
இஸ்லாம் சமூகத்திற்கு மாறிய நபர் பிசிஆர் வழக்கு கொடுத்துள்ளதாகக் காவல் ஆய்வாளர், உதவி ஆணையாளர், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர், தனிப்பிரிவு உள்ளிட்டோரிடம் எங்கள் தரப்பு நியாயத்தை வலியுறுத்தி புகார் கொடுக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய முதலமைச்சர், துணை முதலமைச்சராக இருந்த போது எனது தந்தை துணை முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் இருந்தார்.
காவல் துறையில் பணி செய்தவர் எனது தந்தை. ஆனால் அந்த வேலையெல்லாம் வேண்டாம் என விருப்ப ஓய்வு பெற்று, சமூக பணிகள் செய்தார். தன்னை கொலை செய்யப் போகிறார்கள் எனத் தெரிந்து பல பதிவுகளை சமூக வலைத்தளங்களில் செய்துள்ளார். அப்போதெல்லாம் யாரும் தனது தந்தை பதிவுக்கு உதவி செய்யவில்லை. புதிதாகக் காவல் உதவி ஆணையாளர் பதவி ஏற்ற பின்னும் கூடப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஆவணங்களும் தயார் செய்யப்பட்டு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பிசிஆர் வழக்குப்பதிவு செய்து 60 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் நாங்களே அனைத்து ஆவணங்களும் கொடுத்தும் இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறோம்.
இதையும் படிங்க: குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட போலீசார்! கொல்லப்பட்ட ஜாகிர் உசேன் பிஜிலி மகள் பகீர் குற்றச்சாட்டு! |
முதலமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் இருந்த காவல் துறை சார்ந்தவருக்கே இந்த நிலை என்றால் சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சீரழிந்து இருக்கிறது. வழக்குப்பதிவு செய்யக் கூட லஞ்சம் கேட்கிறார்கள். இது குறித்து உதவி ஆணையாளர் ஒருவர் பேசும் அலைபேசி உரையாடல் அனைத்தும் எங்களிடம் ஆதாரமாக உள்ளது. இது குறித்து நான் தற்போது அரசியல் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கிறேன். என்னுடன் போராட வாருங்கள். எனது தந்தை கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மதச்சாயம் பூச வேண்டாம்” என வீடியோவில் ஜாகிர் உசேன் மகன் இச்சூர் ரகுமான் தெரிவித்துள்ளார்.