தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் - சண்முகத்தம்மாள் தம்பதிக்கு 1959ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தவர் இரா.நாறும்பூநாதன் (66 வயது). நெல்லை மாவட்டத்தின் பிரபல எழுத்தாளரான இவர், மனைவி மற்றும் ஒரு மகனுடன் நெல்லை, பாளையங்கோட்டை அருகே உள்ள சாந்தி நகரில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், இன்று (மார்ச் 16) காலை நடைப்பயிற்சியின்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவரது உயிர் பிரிந்தது. இவர் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பாரத ஸ்டேட் வங்கியில் 30 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற பின்னர் இலக்கியத்துறையில் ஈடுபட்டு முழுநேரமாகத் தமிழுக்குத் தொண்டாற்றி வந்தார்.
இவர் மாவட்ட கலை மன்றத்தின் உதவிச் செயலாளராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளராகவும் பணியாற்றியவர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான இலக்கியக் கூட்டங்களை நடத்தி வந்தவர். இவரின் சிறுகதைகளுக்கென தனி ரசிகர்கள் உள்ளனர்.
தமது நண்பர்களுடன் ‘தர்சனா’ என்ற நாடகக் குழுவை உருவாக்கி ஸ்ருஷ்டி நாடகக் குழுவுடன் இணைந்து, தமிழ்நாடு முழுவதும் சென்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை நடத்திய பெருமை நாறும்பூநாதனுக்கு உண்டு. இவருடைய முதல் நூலான ‘கனவில் உதிர்ந்த பூ’ என்ற நூல் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா தன்னாட்சிக் கல்லூரியில் இளங்கலை மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ‘கண்முன்னே விரியும் கடல்’, ‘யானை சொப்பனம்’, ‘ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்’, ‘இலை உதிர்வதைப் போல’ எனும் சிறுகதை தொகுப்புகளையும் 'தட்டச்சு கால கனவுகள்', 'திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள்', 'வேணுவன மனிதர்கள்' 'கி.ரா கடைசி நேர்காணல்', 'பால் வண்ணம்' என்னும் புதினங்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதி; காரணம் என்ன? |
எழுத்தாளர் இரா.நாறும்பூநாதனின் இலக்கிய பணிகளையும், நாடகப் பணிகளையும், வலைத்தள பணிகளையும் பாராட்டும் வகையில் இவருக்குத் தமிழ்நாடு அரசு 2022ஆம் ஆண்டிற்கான உ.வே.சா விருது வழங்கி கௌரவித்தது. இந்நிலையில் இன்று காலமான நாறும்பூநாதனின் உடல் மருத்துவமனையிலிருந்து நெல்லை சாந்தி நகரில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்டு இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.