சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.
சென்னைச் சேர்ந்த வழக்கறிஞர் ராகேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில், “ராயபுரத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், குறுகலான அந்த சாலையில் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியின் கொடிக்கம்பங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
ராயபுரத்தில் மகப்பேறு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை வரும் பொரும்பாலான நோயாளிகள் இந்த சாலையைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் என்.ஆர்.டி பாலம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதனால், கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டுகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், தகுந்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கொடிகம்பங்களை அகற்ற கெடு
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், முகமதுசபீக் ஆகியோர் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதி ஜி.கே. இளந்திரையன், தமிழ்நாடு முழுவதும் உள்ள பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும், தனி நீதிபதியின் உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க |
இதை பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வரும் ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் கொடிக்கம்பங்களை அகற்றப்பட வேண்டும். அகற்றவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடரலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
அ.தி.மு.க தொடுத்த வழக்கு
முன்னதாக, மதுரை விளாங்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் சித்தன் ஜனவரி 31, 2025 அன்று தாக்கல் செய்த மனுவில், அ.தி.மு.க-வின் 53-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பழைய கொடி கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய கொடி கம்பம் அமைக்க அனுமதி வழங்குமாறு மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி இளந்திரையன், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சி மற்றும் இயக்கங்கள், மத ரீதியான அனைத்து கொடிக் கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.