வேலூர்: செம்பவராயநெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 400 குடும்ப அட்டைகளில், அவர்களது கிராம பெயருக்கு பதிலாக வேறொரு கிராம பெயர் இடம் பெற்றுள்ளது. இதனால், அக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது முகவரியை மாற்றி அமைக்க கோரி சிறப்பு முகாமில் மனு அளித்தனர். ஆனால், 400 அட்டைகளை தங்களால் மாற்ற இயலாது, இ - சேவை மையத்திற்கு சென்று முகவரியை மாற்றிக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், போன்ற திருத்தங்கள் செய்வதற்கான பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை சிறப்பு முகாம், வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட செம்பவராய நெல்லூர் கிராமத்தில் இன்று (ஏப்ரல் 12) நடைபெற்றது. வட்ட வழங்கல் துறை அதிகாரி திவ்யா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுவினை அளித்தனர்.
இதில், செம்பவராயநெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 400 குடும்ப அட்டைகளுக்கு, மேல்பாடி கிராம முகவரியில் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக, தவறான முகவரி உள்ள செம்பவராய நெல்லூர் கிராமத்தை சேர்ந்த அனைவரும் தங்களது குடும்ப அட்டைகளின் முகவரியை மாற்றி அமைக்க கோரி மனு அளிக்க வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செம்பவராய நெல்லூர் கிராமத்தில் குடியிருக்கும் 650 குடும்பங்களில் 400 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட, குடும்ப அட்டைகளில் (ஸ்மார்ட் ரேஷன் கார்டு - Ration Card) செம்பவராய நெல்லூர் என்ற கிராமத்திற்கு பதிலாக, இக்கிராமத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மேல்பாடி என்ற கிராம பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால், அதிகாரிகள் தவறுதலால் வழங்கப்பட்ட அட்டைகளை அதிகாரிகளே மாற்றி தர வேண்டும் என மக்கள் முகாமில் மனு அளித்தனர்.
ஆனால், 400 குடும்ப அட்டைகளை தங்களால் மாற்ற இயலாது, இ - சேவை மையத்திற்கு சென்று முகவரியை மாற்றிக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, முகாம் வைத்தும் எந்த பயனும் இல்லை என மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளில் வேறொரு கிராமத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முகாம் நடத்திய அதிகாரிகளிடம் கேட்ட போது, “குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், தொலைப்பேசி எண் சேர்த்தல் மற்றும் புகைப்படம் சேர்த்தல் போன்ற திருத்தங்கள் மட்டுமே முகாமில் செய்யப்படும். முகவரியை மாற்றுவதற்கு கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் எல்லது இ-சேவை மையத்திற்கு சென்று மாற்ற வேண்டும்” இவ்வாறு தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவர் கூறுகையில், “செம்பவராய நெல்லூர் கிராமத்தில் மொத்தம் 650 குடும்ப அட்டை. இதில், தற்போது 400 குடும்ப அட்டைகள் மேல்பாடி கிராம முகவரியில் உள்ளன. எனவே, இதனை மீண்டும் எங்கள் கிராம முகவரிக்கு மாற்றி கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்