''திமுக பிரமுகர்களுக்கு இரையாக்க முயற்சி'' - அதிமுக எம்எல்ஏ உதவியை நாடிய கல்லூரி மாணவி!
திமுக பிரமுகர் ஏமாற்றி தாலி கட்டி, அரசியல் பிரமுகர்களுக்கு இரையாக்க முயற்சி செய்வதாக கல்லூரி மாணவி குற்றம்சாட்டி அதிமுக எம்எல்ஏவின் உதவியை நாடி இருப்பது ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published : May 16, 2025 at 9:53 PM IST
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியை சேர்ந்த 21 வயது மாணவி அதேப்பகுதி கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி அரக்கோணம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்த அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி கலந்து கொண்டார்.
அப்போது சட்டமன்ற உறுப்பினர் ரவியை கல்லூரி மாணவி நடுரோட்டில் சந்தித்து தனக்கு உரிய நீதி பெற்றுத் தர வேண்டும் என, கண்ணீர் மல்க கோரிக்கை மனுவை அளித்தார். அந்த மனுவில், ''அரக்கோணம் அடுத்த காவனூர் பகுதியைச் சேர்ந்த தெய்வசாயல் என்பவர் திமுகவில் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார்.
அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் என்னை காதலிப்பதாக ஏமாற்றி கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி சோளிங்கர் கரிக்கல் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். கடந்த மார்ச் மாதம் வரை சுமூகமாக சென்ற வாழ்க்கையில் திடீரென தெய்வச்சாயல் திமுக முக்கிய பிரமுகர்களுக்கு என்னை இரையாக்க முயற்சித்தார்.
இச்செயலுக்கு நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தினந்தோறும் என்னை கடுமையாக தாக்கினார். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி தெய்வசாயல் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன். உறவினர்கள் என்னை மீட்டு முதலில் அரக்கோணம் அரசு மருத்துவமனையிலும் மற்றும் அதனை தொடர்ந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றேன்.
மேலும் தற்கொலை முயற்சி குறித்து காவல் துறையினர் எவ்வித விசாரணை மேற்கொள்ளவில்லை. இதை தொடர்ந்து நான் அவருடன் செல்லவில்லை என்றால் என்னுடைய பெற்றோர்களை வாகனம் ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டி அழைத்துச் சென்றார்.
அங்கு எனக்கு கொடுமைகள் அரங்கேறியதால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல், நிரந்தரமாக எனது தாய் வீட்டிற்கு வந்து என்னுடைய கல்லூரி படிப்பை மீண்டும் தொடர்ந்து வருகிறேன். இருப்பினும் தெய்வ சாயல் என்னை விடாமல் தொடர்ந்து தொல்லை செய்து வருகிறார்.
இதுகுறித்து அரக்கோணம் நகர காவல் நிலையத்திற்கு புகாரளிக்க சென்றபோது, 'இது எங்களுடைய எல்லை இல்லை' என திருப்பி அனுப்பி விட்டனர். இதை தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றபோது ஆய்வாளர் காவல் நிலையத்தில் இல்லாத காரணத்தினால் அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டேன்.
அரக்கோணம் நகர காவல் நிலையத்திலும் நான் அலைக்கழிக்கப்பட்டதால் நேரடியாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை நாடினேன். அங்கு புகார் மனு பெறப்பட்டு மீண்டும் அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டேன். இதுபோன்று தொடர்ந்து புகார் மனு பெறாமல் என்னை அலைக்கழித்து வருகின்றனர்." என்று கூறி அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவியை சந்தித்து தனக்கு நீதி பெற்று தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தமிழில் பெயர் வைக்க சொல்லும் தமிழ்நாடு அரசு; முதலமைச்சர் திறந்து வைத்த கிராமத்துக்கோ ''ஆங்கிலத்தில் பெயர்''!
மேலும் திமுக பின்புலம் கொண்ட நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையினர் தயக்கம் காட்டி வருவதால் தனக்கு ஆதரவாக இருக்கும்படி அதிமுக சட்டமன்ற உறுப்பினரை வேண்டிக் கொண்டார். இதை தொடர்ந்து மாணவியின் புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு நீதி கிடைக்கும் வரை ஆதரவாக இருப்பதாக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கல்லூரி மாணவி அளித்த புகாரின் கீழ் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் தெய்வசாயல் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

