சென்னை: பிரபல தொழிலதிபரும், மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழுமத்தின் நிறுவனருமான ராமோஜி ராவ் (87) கடந்த ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நகரமான ராமோஜி பிலிம் சிட்டியை உருவாக்கிய ராமோஜி ராவ் 'ஈநாடு' நாளிதழ், 'ஈடிவி', ராமோஜி பிலிம் சிட்டி, 'ஈடிவி பாரத் நெட்வொர்க்' உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கிய ராமோஜி குழுமத்தின் தலைவராக இருந்தார். மேலும் சினிமா, சிட் ஃபண்ட், உணவு, விருந்தோம்பல் உள்பட பல்துறைகளிலும் சாதனை படைத்தவராக திகழ்ந்தார். பத்திரிகை, இலக்கியம், கல்வி துறைகளில் அவர் ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் ராமோஜி ராவுக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
உருக்கமான கருத்துகள்: ராமோஜி குழுமத்தின் சென்னை அலுவலகத்தில் ராமோஜி ராவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.ஈநாடு நாளிதழ் சென்னை அலுவலகத்தின் சந்தைப்படுத்தல் மேலாளர் நாகராஜு தலைமையில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராமோஜி குழுமத்தின் ஈநாடு, ஈடிவி, ஈடிவி பாரத் தமிழ்நாடு ஆகிய நிறுவனங்களின் ஊழியர்கள் பங்கேற்றனர். ராமோஜி ராவை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ராமோஜி ராவ் குறித்து தயாரிக்கப்பட்ட குறும்படம் ஒன்றும் ஒளிபரப்பப்பட்டது. ராமோஜி ராவ் குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பிரபலங்கள் தெரிவித்த உருக்கமான, உணர்வுப்பூர்வமான கருத்துகள் குறும்படத்தில் இடம்பெற்றிருந்தன.

ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்:அலங்கரிக்கப்பட்ட ராமோஜி ராவின் உருவப்படத்துக்கு, ராமோஜி குழும ஊழியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பேசிய ஈநாடு சந்தைப்படுத்தல் மேலாளர் நாகராஜு, "ராமோஜி குழும தலைவர் ராமோஜி ராவ், எளிய வேளாண் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர் மேற்கொண்ட தொழில்கள் அனைத்தும் வெற்றியை நோக்கி பயணித்தன.
இதையும் படிங்க: ராமோஜி ராவ் முதலாம் ஆண்டு நினைவு: தமிழகம் முழுவதும் 'மார்கதர்சி சிட் ஃபண்ட்' ஊழியர்கள் ரத்த தானம்!
ஈநாடு நாளிதழ் திருப்பதி பதிப்பு அலுவலகத்தில் ராமோஜி ராவ் தலைமையில் நடைபெற்ற பல ஆலோசனை கூட்டங்களில் நான் கலந்து கொண்டிருக்கின்றேன். அப்போதெல்லாம் அவர் பல்வேறு சிறந்த ஆலோசனைகளை வழங்கினார். ஊழியர்கள் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். அவரது நினைவுகள் என்றும் போற்றத்தக்கவை. அவரது ஆலோசனைகளை நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும்."என்று கூறினார்.

மதுரையில் மலரஞ்சலி
மதுரை தேம்பாவணியில் அமைந்துள்ள மார்கதர்சி சிட் பண்ட் கிளை அலுவலக ஊழியர்கள், கிளை மேலாளர் ஸ்ரீதர் முன்னிலையில் ரத்த தானம் செய்தனர். இதனை அடுத்து நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் ஊழியர்கள் அனைவரும் பங்கேற்று ராமோஜி உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பேசிய மார்கதர்சி சிட் பண்ட் கிளை மேலாளர் ஸ்ரீதர், "கடுமையான உழைப்பின் வாயிலாக ராமோஜி குழும நிறுவனங்களை வளர்த்தெடுத்தவர் ராமோஜி ராவ். குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் வளர்ச்சியிலும் அதன் ஊழியர்கள் ஒவ்வொருவர் மேம்பாட்டிலும் அவர் காட்டிய அக்கறை ஈடு இணையற்றது. அவரது உழைப்பு எந்த அளவிற்கு உன்னதமானதோ அதைவிட அவருடைய அர்ப்பணிப்பு மனப்பான்மையும் நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும். ராமோஜி ராவின் கனவுகளை நனவாக்குவது ஒன்றே அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளில் நாம் அவருக்கு செய்யும் அஞ்சலி." என்று உருக்கமாக பேசினார்.
இதனைத் தொடர்ந்து மதுரை கிளை ஊழியர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.