விருதுநகர்: சிவகாசியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, "அதிமுக கூட்டணியை பார்த்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அதிமுக அமைத்துள்ள பூத் கமிட்டி போல் வேறு எந்த கட்சியும் அமைக்கவில்லை. திமுக இதுவரை பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடத்தியது இல்லை. தேர்தல் நேரத்தில் திமுக நிர்வாகிகளே அக்கட்சிக்கு ஆப்பு வைக்க உள்ளனர். திமுகவினரே உள்ளே பொங்கிக் கொண்டு இருக்கின்றனர். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெற்றது மிகப் பெரிய வெற்றி தான். 66 இடங்களில் அதிமுக வென்றது.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றும். அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்க தேர்தல் தற்போதைய திமுகவால் நடத்த முடிகிறதா? நம்மை எதிர்க்க திமுகவில் யாரும் கிடையாது” என்றார்.
அதிமுக, பாஜக கூட்டணி குறித்து பேசுகையில், “அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் அமைத்துள்ள கூட்டணி அற்புதமான கூட்டணி. மதவாதம், இனவாதம் வரலாமா? என சிலர் வெளியில் இருந்து பேசுவார்கள். அறிவுரை வழங்க திமுக கூட்டணி கட்சிகளுக்கு யோக்கியதை கிடையாது.
இபிஎஸ் இருக்கின்ற இடத்தில் மதவாதம் இருக்காது. மதவாதம் இருந்தால் இபிஎஸ் அங்கு இருக்க மாட்டார். எங்களுக்கு நல்லது செய்வதை போல திமுக கூட்டணியில் உள்ள சில பேர் கெட்டதே செய்கின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி என்று எங்கே சொன்னார்கள்? யார் சொன்னது? தமிழ்நாட்டில் இபிஎஸ் தலைமையிலான அதிமுக கூட்டணி ஆட்சி வரும். இபிஎஸ் தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தான் அமையும்” என்றார்.
திமுக ஆட்சி குறித்து பேசுகையில், “ஈழத் தலைவர் பிரபாகரனுக்கு ஒப்பான வீரத்தை பெற்றவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஆட்சி தான் சமூகநீதிக்கான ஆட்சி. திமுக சமூக நீதிக்காகவும், தமிழ் மொழிக்காகவும் போராடுவதாக பொய் சொல்லி வேஷம் போட்டு வருகின்றனர்.
அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வர திட்டங்கள் எங்களிடம் இருக்கிறது. திமுக ஆட்சியில் எத்தனை திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அது குறித்து நேரடி விவாதத்திற்கு தயார். ஒன்றுமில்லாத பானையை வைத்து உருட்டினாலும் வெள்ளி செம்பாக ஆகாது தம்பி. என்ன தான் பித்தளையை உருட்டினாலும் வெள்ளியாகாது” என்றார்.
தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் குறித்து ராஜேந்திர பாலாஜி பேசுகையில், “திமுக ஆட்சிக்கு வந்த உடனே என் மீது பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளது. சிபிஐ மற்றும் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகின்றன. இந்த வழக்குகளை பார்த்து பயந்து ஓடவில்லை. தொடர் வழக்குகள் என் மீது போடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அதிமுக ஒருங்கிணைப்புக்கு எடப்பாடி பழனிசாமி தடையாக உள்ளார்! அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி!
என்னை சிறைச்சாலைக்கு அனுப்பி விடலாமா? என்று திமுகவினர் எண்ணுகின்றனர். நான் யாரையும் ஏமாற்றியதாக வரலாறு கிடையாது. என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும், அதிமுகவை ஆட்சியில் அமர வைப்பேன். இன்னும் ஆறு மாதங்களில் 2026 சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக இருக்கிறது. எனவே கட்சி நிர்வாகிகள் முழுமூச்சுடன் கட்சிப் பணியாற்ற வேண்டும்” என அறிவுறுத்தினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்