வேலூர்: மத்திய அரசு தமிழகத்தில் தற்போதைக்கு சுங்கச்சாவடிகளை மூடும் எண்ணம் இல்லை என கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
வேலூர் அரசு மருத்துவமனைக்கு அருகில் இருந்த இடத்தில், ரூ.150 கோடி செலவில் புதிதாக பல்நோக்கு அரசு மருத்துவமனை கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. அதனை நேற்று (ஜூன் 6) பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேலூர் ஆட்சியர் சுப்பு லெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், வில்வநாதன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இதையடுத்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அமைச்சரிடம் தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், “ தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை மூடுவது குறித்து நான் பல முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன். அதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் மத்திய அரசு தமிழகத்தில் தற்போதைக்கு சுங்கச்சாவடிகளை மூடும் எண்ணம் இல்லை தெரிவித்துள்ளது. மேலும் சுங்கச்சாவடிகளில் வசூல் செய்யப்படும் பணத்தை வைத்துதான் சாலைகளை பராமரிக்கவும், மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெறுவதாக விளக்கமளித்துள்ளனர். எனவே மத்திய அரசு சுங்கச்சாவடியையும் மூடுவதாக இல்லை” என்றார்.
முன்னதாக பேசிய அவர், “வேலூர் அரசு பல்நோக்கு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் அமையவிருக்கிறது. இந்த மருத்துவமனையில் 11 அறுவை சிகிச்சை மையங்கள் உள்ளன. விரைவில் இந்த மருத்துவமனையை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். மேலும், சேர்க்காடு அரசு மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவடைய உள்ளது. விரைவில் அதையும் முதலமைச்சர் திறந்து வைப்பார். இந்த புதிய அரசு பல்நோக்கு மருத்துவமனையில் புதிய மருத்துவர்கள் நியமிப்பது குறித்து நாளை சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு மேம்பாலம் அமைக்கும் திட்டம் இல்லை. ஏனென்றால், மேம்பாலம் அமைக்க கட்டிடங்களை இடிக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால், சி.எம்.சி மருத்துவமனையின் அருகே சுரங்கப்பாதை அமைக்க இடம் கேட்டுள்ளோம்.
இதையும் படிங்க: "ஞானசேகரனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை, ஒருமுறை கூட போனில் பேசியதில்லை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓப்பன் டாக்! |
கடந்த ஆட்சியில் 70 ரயில்வே மேம்பாலம் அமைக்க ஒப்புதல் வழங்கிவிட்டு சென்றுவிட்டனர். ஆனால் நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை. அணுகு சாலையும், அமைக்க திட்டமிடவில்லை. அவை அனைத்தையும் நாங்கள்தான் செய்து வருகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அறிவிக்கப்பட்டபடி 35 ரயில்வே பாலங்களை கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தபடும் பணியானது 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இவை நிறைவடைந்த பிறகுதான், டெண்டர் விட வேண்டும். வேலூரில் 13.40 கிலோமீட்டருக்கு புறவழி சாலை அமைக்க வேண்டும்.
அந்த அடிப்படையில் ரூ.300 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் நடக்க இருக்கிறது. அதில் 3 பாலங்களும் அமையும். இந்த ஆண்டே பணிகளை கட்டாயம் துவங்கிவிடுவோம். பிரம்மபுரம் - சத்துவாச்சாரி வரையில் ரூ.100 கோடிக்கு மேம்பால பணிகள் நடந்து வருகிறது” எனக் கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.