கோயம்புத்தூர்: மருதமலை அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் அனைவரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். மேலும், இதற்கு வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மருதமலை அடுத்த தொண்டாமுத்தூர், கெம்பனூர் பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் வெளியேறி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நரசிபுரத்தை அடுத்த விராலியூர் பகுதியில் ஒற்றை யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதில் பூசாரி உட்பட இருவர் காயமடைந்தனர்.
இதனிடையே விளைநிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்தி வரும் யானைகளை தொடர்ந்து வனத்துறையினர் போராடி விரட்டி வருகின்றனர். ஆனாலும் இரவு நேரத்தில் தொடர்ந்து யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இந்நிலையில், தொண்டாமுத்தூர் அருகே கருப்புசாமி, ராஜப்பன், வெங்கடாசலம் ஆகியோரின் தோட்டத்தில் மின்வேலியை உடைத்து விளைநிலத்தில் நேற்று முன்தினம் இரவு புகுந்த யானை கூட்டம் மரவள்ளிக் கிழங்கு பயிரை சேதப்படுத்தியது.
இந்த நிலையில் கெம்பனூர் பகுதியில் விவேக் என்பவரின் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியைச் சிறுத்தை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து செய்த வனத்துறையினர், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது பேசிய அப்பகுதி மக்கள் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் அவ்வப்போது மனித உயிரிழப்புகளும், கால்நடைகளும் உயிரிழந்து வருகின்றன. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் முறையிட்டனர். அப்போது, வனத்துறையினரின் பதிலில் திருப்தியடையாத அப்பகுதி மக்கள், வனத்துறையினர் அந்த வாகனத்தை சிறை பிடித்து, உயர் அதிகாரிகள் வரும்வரை விடமாட்டோம் என தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து வனச்சரகர் திருமுருகன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் சிறுத்தையின் கால்தடம் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்தனர்.
பின்னர் இதுகுறித்து பேசிய வனத்துறை அதிகாரிகள், "தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ள இடங்களில் 4 கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது. மேலும், யானை நடமாட்டத்திற்கு தீர்வு காணும் வகையில் மருதமலை முதல் அட்டுக்கல் வரை சுமார் 11 கிலோமீட்டருக்கு யானை புகா அகழி அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும் அகழி அமைக்கும் பணிகள் நடைபெறும்" எனத் தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: நடுக்கடலில் தத்தளித்த சென்னை மீனவர்.. கடலோர காவல் படையால் மீட்பு!