திருப்பத்தூர்: சூப்பர் மார்க்கெட்டில் 3,700 ரூபாய்க்கு மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு, பணம் செலுத்தாமல் தப்பியதாகக் கூறி, 3 இளைஞர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் கல்லியூர் பகுதியைச் சேர்ந்தவர் கவி. இவர் புதுப்பேட்டை பகுதியில் ‘தமிழன்’ சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று (ஜூன் 7) வெங்களாபுரம் பகுதியை சேர்ந்த கௌதம், சஞ்சய், ஜெகன் ஆகிய மூன்று பேரும் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக இந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்துள்ளனர்.
மார்க்கெட் உள்ளே சென்று ரூ.3,700-க்கு மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்ட அவர்கள், ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதாக தெரிவித்துள்ளனர். பின்னர், கூகுள் பே-வில் இருந்து ஒரு ரூபாய் மட்டும் அனுப்பிவிட்டு, அங்கிருந்து அவசர அவசரமாக இருசக்கர வாகனத்தில் கிளம்பியதாக கூறப்படுகிறது.

அதனைக் கண்ட கவி, அவர்களை பின்தொடர்ந்து சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தை வழி மறித்த கவி, வாங்கிய பொருளுக்கான பணத்தை கேட்டுள்ளார். அப்போது, மூவரும் மாற்றி மாற்றி பேசியதாக தெரிகிறது. அதனால் ஆத்திரமடைந்த கடை உரிமையாளர், பொதுமக்களின் உதவியுடன் தர்ம அடி கொடுத்துள்ளார். அதனை கண்ட சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ''மசாஜ் செய்துவிட்டு தீர்த்துக்கட்டிய மருத்துவர்'': இளம்பெண் மரணத்தில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்! |
அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி, கடை உரிமையாளரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து, காயமடைந்து மூன்று பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதற்கிடையே, அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியதால், போலீசாருக்கும், சூப்பர் மார்க்கெட்டின் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் புகார் அளிக்காத காரணத்தால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சென்றுள்ளனர். தற்போது, இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.