சென்னை: வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்கும் முனைப்பில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் பாமக, தேமுதிகவை தங்கள் அணிக்கு கொண்டு வரும் முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று முன்தினம் (ஏப்ரல் 12) செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ''அதிமுக - பாஜக கூட்டணி குறித்து தற்போது கருத்து சொல்ல முடியாது. இது அதிமுகவும், பாஜகவும் இணைந்து எடுத்த ஒரு முடிவு. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருப்பதால் நிதானமாக யோசித்து தான் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம்." என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 14) தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரதமர் மோடியை பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ''கேப்டன் விஜயகாந்த் திரையுலகத்திலும் அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டும் இல்லை. பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர்.
பிரதமர் மோடிக்கும், விஜயகாந்துக்கும் இடையே இருந்த உறவு அரசியலை தாண்டிய உறவு. விஜயகாந்த் பிறந்தநாளின் போது அவருக்கு பிரதமர் அழைத்து வாழ்த்து சொல்வார். 'தமிழ்நாட்டின் சிங்கம்' என்று அன்பாக அழைப்பதோடு, அவரது உடல்நலக் குறைபாடுகள்போது ஒரு சகோதரரை போல கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுவார்.
உலகத்தின் எந்த இடத்தில் என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று பிரதமர் மோடி சொன்னார். ''நான் உங்கள் மூத்த சகோதரனைப் போல'' என்று பிரதமர் மோடி சொன்னதை நான் என்னுடைய வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன். விஜயகாந்த் - பிரதமர் மோடி நட்பு பரஸ்பர மரியாதையிலும், அன்பிலும் கட்டப்பட்ட மிகவும் அரிதான ஒன்று" என பிரேமலதா விஜயகாந்த் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 14) தனது எக்ஸ் பக்கத்தில் விஜயகாந்த் குறித்து தமிழில் ஒரு பதிவிட்டுள்ளார். அந்த பதில், ''எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர். நானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன் இணைந்தும் பணியாற்றி இருக்கிறோம். சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளை சேர்ந்த மக்கள் அவரை நினைவுகூர்கிறார்கள்." என பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ''நான் யார் தெரியுமா?" - ஆர்டிஓவிடம் வாயை கொடுத்து வம்பில் சிக்கிய 'பாஜக நிர்வாகி'!
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு மேலும் பல கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வரும் பணியை இரு கட்சிகளும் முன்னெடுத்து வருகின்றன. இந்த சூழலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரதமர் மோடியை பாராட்டி இருப்பதும், பதிலுக்கு விஜயகாந்த்தை புகழ்ந்து பிரதமர் மோடி பதிவிட்டு இருப்பதையும் வைத்துப் பார்க்கும்போது பாஜக - தேமுதிக கூட்டணிக்கான ஆரம்பமாக இருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்