மதுரை: அண்மையில் இந்திய ராணுவத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியிருந்தார். பிறகு அதற்கு மறுப்பும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் முன்னாள் ராணுவத்தினர் லீக் அமைப்பின் தலைவர் முன்னாள் கர்னல் சி.டி. அரசு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் தொடர்ந்து பல தாக்குதல் நடத்தப் போவதற்கான தகவல்கள் கிடைத்த உடனே நமது நாட்டினுடைய பாதுகாப்பு அமைச்சகம் ' ஆப்ரேஷன் சிந்தூர்' வாயிலாக நடவடிக்கை எடுத்தது. அப்போதே பாகிஸ்தான் மன்னிப்பு கேட்டிருக்கலாம்.
பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்கள், அவர்களது தங்கும் இடங்கள், ஆயுதக் கிடங்குகளை அழிப்பது தான் நமது நோக்கமே தவிர பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது அல்ல. இந்த தாக்குதல் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டுமானால் அது பாகிஸ்தான் கையில் தான் உள்ளது. மீண்டும் பயங்கரவாத தாக்குதல்களை இந்தியாவிற்கு எங்கேனும் நடத்தினார்கள் என்றால் தாக்குதல் தொடரும்.
ஆகவே மக்கள் பாதுகாப்பு பற்றி கவலைப்பட வேண்டாம். அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்துள்ளது. வடக்கே ஜம்மு காஷ்மீரில் இருந்து மேற்கே குஜராத் வரையிலும் அனைத்து எல்லை பகுதிகளிலும் முப்படைகள் வழியாக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் அமைச்சர் பதவியில் இருந்த செல்லூர் ராஜு தற்போது சட்டசபை உறுப்பினராக இருக்கிறார். இவர் படை வீரர்கள் சண்டை போட்டார்களா? என பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரின் இந்தக் கருத்தைக் கேட்டு அகில இந்திய அளவில் அனைத்து இந்நாள், முன்னாள் படை வீரர்களும், தமிழ்நாட்டின் இந்நாள், முன்னாள் படை வீரர்களும் மனவேதனையில் உள்ளோம்.
இதையும் படிங்க: போக்சோ வழக்கில் கைதான ஜான் ஜெபராஜுக்கு ஜாமீன்! நீதிமன்ற வாதத்தில் கூறப்பட்டது என்ன?
செல்லூர் ராஜூ அவர் கருத்தை திரும்ப பெற வேண்டும். பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் கேட்க விட்டால் அவரது கட்சித் தலைமையிடம் நாங்கள் மனு கொடுத்து கட்சிரீதியாக நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்துவோம். மேலும் மீண்டும் அவருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் முன்னாள் படை வீரர்கள் அவரை எதிர்த்து ஓட்டு கேட்டு அவரை தோற்கடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்வோம்.
சமூக வலைதளங்களில் அவர் கூறிய கருத்துக்கள் இப்போதும் உள்ளன. இது அவர் சொன்னது தான் மறுக்க முடியாது. தற்போது சொல்லவில்லை என்று அந்தர் பல்டி அடிக்கிறார். செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்காவிட்டால் அவருக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுப்போம். வருங்காலத்தில் எந்த தேர்தலில் அவர் போட்டியிட்டாலும் அவருக்கு எதிராக நாங்கள் தேர்தல் பணியாற்றுவோம்'' என இவ்வாறு முன்னாள் கர்னல் சி.டி. அரசு கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.