சென்னை: அம்பேத்கரையும், பெரியாரையும் இழிவுப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை புறக்கணிக்க வேண்டும் என்று அம்பேத்கரின் பேரனும், வழக்கறிஞருமான பிரகாஷ் அம்பேத்கர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தாழ்த்தப்பட்ட மக்களை பாதுகாப்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் பாராட்டினார்.
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னையில் இன்று சமத்துவ நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக ரூ.227 கோடியே 85 லட்சம் செலவில் கட்டப்பட்ட 18 விடுதிகள், 19 சமுதாய நலக்கூடங்கள், 1000 பழங்குடியினர் குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:
தென்னகமே முன்னோடி:
சாதியத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், சமத்துவமான சமூகத்தை கட்டமைக்கவே முடியாது என அம்பேத்கர் கூறியிருந்தார். சாதியத்தால் தான் இந்தியா இன்றைக்கு 'மேலே உள்ள இந்தியா', 'கீழே உள்ள இந்தியா' என இரண்டு பிளவுகளாக பிரிந்து கிடக்கிறது. இந்தியாவில் இப்போது பல பகுதிகளில் சமூக நீதி போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால், இதற்கு முன்னோடி தென்னகத்தில் உள்ள தலைவர்கள்தான் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. தென்னகத்தில் உள்ள தலைவர்களே முதன்முதலில் சமூக நீதி போராட்டங்களை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் ஆணவக் கொலைகள்:
அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக கொண்டாடுவது தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கை ஆகும். ஆணவக் கொலைகள் மிகக் குறைவாக நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கக் கூடிய செய்தி. இதை இன்னொரு படி மேலே கொண்டு செல்ல வேண்டுமானால், ஆணவ கொலைகளை தடுக்க கடுமையான சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். அப்படி செய்தால், அது மற்ற மாநிலங்கள் அனைத்துக்கும் முன்னோடியாக இருக்கும்.
தமிழக அரசுக்கு பாராட்டு:
ஆணவ கொலைகள் நம் நாட்டில் தொடர்ந்து நடப்பது சாதி ஒழியவில்லை என்பதற்கு சான்றாக இருக்கிறது. சமுதாய ஒற்றுமையை சீர்குலைப்பதே சாதிதான். இந்தியாவில் சாதி இருப்பதால்தான், நாம் ஒருங்கிணைந்து சமூகமாக வாழ்வது கூட பெரும் போராட்டமாக உள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல திட்டங்களை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறைச் சம்பவங்களுக்கு SC/ST சட்டத்தின் மூலம் தமிழக அரசு சிறந்த முறையில் தீர்வு கண்டு வருகிறது. இவ்வாறு பிரகாஷ் அம்பேத்கர் பேசினார்.
அம்பேத்கர், பெரியாரை இழிவுப்படுத்துவதா?
முன்னதாக, நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் அவமதிக்கப்பட்ட விவகாரம் பற்றி பிரகாஷ் அம்பேத்கரிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் எப்போதுமே ஒடுக்கப்பட்டவர்களின் வளர்ச்சியை எதிர்ப்பார்கள். அவர்கள்தான் அம்பேத்கரையும், பெரியாரையும் அவமதிக்கவும் செய்வார்கள். அவர்களை அடையாளம் கண்டு நாம் புறக்கணிக்க வேண்டும்" எனக் கூறினார்.
