திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தண்டையார் குளம் பகுதியில் பிறந்தவர் நயினார் நாகேந்திரன். வயது 64. இவருக்கு சந்திரா என்ற மனைவியும்,2 மகன்களும் 1 மகளும் உள்ளனர். இவர் முதுகலை பட்டம் பெற்றவர்.
எம்ஜிஆர் மீதான ஈர்ப்பு காரணமாக நயினார் நாகேந்திரன் 1989 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். அப்போதே அவரது அரசியல் பயணம் தொடங்கிவிட்டது. நயினார் நாகேந்திரன் ஆரம்பத்தில் அதிமுகவில் பணகுடி நகரச் செயலாளர், இளைஞர் அணிச் செயலாளர், நெல்லை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், மாநில ஜெயலலிதா பேரவையின் செயலாளர், தேர்தல் பிரிவு இணைச்செயலாளர் என பல்வேறு கட்சிப் பதவிகளை வகித்தார்.
ஜெயலலிதா அமைச்சரவையில் பவர்ஃபுல் பொறுப்பு
2001 ஆம் ஆண்டு திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று ஜெயலலிதா அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் தொழில் துறை அமைச்சராக பதவி வகித்தார். மீண்டும் 2006 ஆம் ஆண்டு திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
பின்னர் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, சட்டமன்றத்திற்கு சென்றபோதிலும் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. 2016ஆம் ஆண்டு மீண்டும் நெல்லை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்கள் காரணமாக அதிமுகவை விட்டு விலகி 2017 ஆம் ஆண்டு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு பாஜக மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
2019 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் மீண்டும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது தமிழக பாஜக சட்டமன்ற குழுத் தலைவராக இருந்து வருகிறார். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், எம்எல்ஏவாக இருந்து கொண்டே திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ருஸ்சிடம் தோல்வியை தழுவினார்.
நயினாரின் அசுர வளரச்சியும், பண்ணையார் பெயரும்
இயல்பாகவே பணக்கார குடும்பமாக நயினார் நாகேந்திரன் குடும்பம் இருந்து வந்தது. இதுபோன்ற சூழ்நிலையில்தான், 2001 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரனுக்கு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் வாய்ப்பு கொடுத்தார். எனவே 2001 இல் இருந்து 2006 வரை 5 ஆண்டுகள் முழுமையாக நயினார் நாகேந்திரன் அமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொண்டார். அந்த காலகட்டங்களில் அவரது துறைகள் மாற்றப்பட்டாலும் கூட ஐந்து ஆண்டுகள் முழுமையாக அமைச்சராக பதவி வகித்தார். இதன் மூலம் உள்ளூரில் அசுர வளர்ச்சி பெற்ற அவரை, அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் 'பண்ணையார்' என்று செல்லமாக அழைக்க தொடங்கினர்.
ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்டது ஏன்?
நயினார் நாகேந்திரன் அதிமுகவில் வளர்ந்து வந்த காலகட்டத்தில், சமீபத்தில் மறைந்த கருப்பசாமி பாண்டியன் மட்டுமே திருநெல்வேலி மாவட்ட அதிமுகவில் செல்வாக்குமிக்க நபராக இருந்தார். அதிமுகவில் நயினார் நாகேந்திரன் வளர்வதற்கு கருப்பசாமி பாண்டியன் முக்கிய காரணமாவார். எனவே நயினார் நாகேந்திரன், கருப்பசாமி பாண்டியனை தனது அரசியல் ஆசானாக மதித்து வந்தார். இதுபோன்ற சூழலில் தான் 2001 ஆம் ஆண்டு பல்வேறு காரணங்களால் கருப்பசாமி பாண்டியன் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இது நயினார் நாகேந்திரனுக்கு பெரும் அதிர்ஷ்டமாக அமைந்தது.
ஏனென்றால் கருப்பசாமி பாண்டியனுக்கு அடுத்தபடியாக திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் ஒருவர் மட்டுமே அதிமுகவில் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தார். எனவே ஜெயலலிதா பெரும் நம்பிக்கை வைத்து நயினார் நாகேந்திரனை மாவட்ட செயலாளராக்கினார். அந்தக் காலக்கட்டத்தில், நயினார் நாகேந்திரன் யார் கையை காட்டுகிறாரோ அந்த நபருக்கே தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு வழங்கி வந்தார்.
இதையும் படிங்க: தேஜகூ கூட்டணியில் மீண்டும் அதிமுக! 2026-ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் என அமித் ஷா அறிவிப்பு! |
அந்த அளவுக்கு ஜெயலலிதாவிடம் செல்வாக்கு மிக்கவராக நயினார் இருந்து வந்தார். அதேசமயம், 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கருப்பசாமி பாண்டியன் திமுக சார்பில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது நயினார் நாகேந்திரன் தனது ஆசானுக்கு ஆதரவாக செயல்படும் வகையில் தென்காசி தொகுதியை கூட்டணி கட்சியான மதிமுவுக்கு ஒதுக்க சிபாரிசு செய்ததாக கூறப்பட்டது.
நயினாரின் பேச்சைக் கேட்டு அப்போது தென்காசி தொகுதி ஜெயலலிதா மதிமுகவுக்கு ஒதுக்கியிருந்தார். இந்தத் தேர்தலில் மதிமுக வேட்பாளரை எளிதாக தோற்கடித்து, கருப்பசாமி பாண்டியன் சுலபமாக வெற்றி பெற்றார் எனவே தென்காசியில் அதிமுக கூட்டணியின் தோல்விக்கு, நயினார் நாகேந்திரன் தான் காரணம் என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
அதேபோல் ராதாபுரம் உட்பட பல்வேறு தொகுதிகளில் நயினார் நாகேந்திரன் தனது கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொள்ளாமல், எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவர் மீது அதிமுக தொண்டர்கள் குற்றஞ்சாட்டினர். இதுதொடர்பான கள ஆய்வுகள் ஜெயலலிதாவிடம் கொண்டு செல்லப்பட்டதால் கடும் கோபம் அடைந்த ஜெயலலிதா, 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு அவருக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை. அதேசமயம் உள்ளூரில் செல்வாக்கு மிக்கவர் என்பதால் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் நயினா நாகேந்திரன் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார். அதேசமயம் கடைசி வரை மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவியை ஜெயலலிதா வழங்கவில்லை.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்