நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பொட்டணம் பகுதியில் கொ.ம.தே.க எம்.பி மாதேஸ்வரனுக்கு சொந்தமான வீட்டில் நேற்று இரவு தீ விபத்து நேரிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராகவும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளராகவும் இருக்கும் மாதேஸ்வரனுக்கு பொட்டணம் பகுதியில் ஒரு வீடு உள்ளது. அங்கு மாதேஸ்வரனின் தாயார் வரதம்மாள் வசித்து வருகிறார்.
வழக்கம்போல் நேற்றிரவு உணவுக்குப் பின்னர் வரதம்மாள், வீட்டின் படுக்கையறையில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு திடீரென படுக்கையறையில் தீ விபத்து நேரிட்டுள்ளது. தீயின் அனல் காரணமாக திடுக்கிட்டு விழித்தெழுந்த வரதம்மாள் கூச்சலிட்டபடியே வெளியே வந்தார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர். முதலில் அறைக்குள் பற்றிய தீ, அறையில் இருந்த ஏ.சி, மெத்தைகள், டேபிள், சேர், அலமாரிகள் ஆகியவற்றிலும் பரவியது. இதனால் அவர்களால் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை.
இதையும் படிங்க: Ghibli: ஜிப்லி புகைப்படத்தை அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்? - சைபர் கிரைம் எச்சரிக்கை!
இதையடுத்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனைத் தொடர்ந்து சேந்தமங்கலம் காவல் நிலையப் போலீசார் சமபவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், படுக்கை அறையில் இருந்த ஏசியில் நேரிட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்தது. எனினும் விசாரணை முடிவடைந்த பின்னரே தீ விபத்துக்கான காரணம் தெரியவரும் என்றும் போலீசார் கூறினர்.
இந்த சூழலில், எம்பி மாதேஸ்வரன் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நாமக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா, "முதல்கட்ட விசாரணையில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகிறது. பொய்யான தகவல்களை வைத்து புரளியை பரப்பும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,"என்று எச்சரித்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.