திருவாரூர்: அகர திருமாளம் பகுதியில் இரு சக்கர வாகனத்தின் மீது ஜல்லி ஏற்றிக் கொண்டு வந்த லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரு சக்கர வகனத்தில் சென்ற தந்தை, மகன், மகள் ஆகிய 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து பேரளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள வரவூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (30). இவர் மயிலாடுதுறையில் கார் பழுது நீக்கும் கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 10) காலை மிளகாய் தூள் அரைப்பதற்காக, தனது மகன் நிரோஷன் (6) மற்றும் மகள் சியாஷினி (3) ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில், பூந்தோட்டத்தில் இருந்து காரைக்கால் செல்லும் சாலையில் உள்ள கோவில் திருமாளம் என்ற இடத்திற்கு சென்றார்.
அங்கு மிளகாய் தூள் அரைத்து விட்டு மீண்டும் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அகர திருமாளம் என்ற இடத்தில் வந்துக் கொண்டிருந்த போது, கரூரில் இருந்து ஜல்லி ஏற்றிக் கொண்டு எதிரே அதி வேகமாக வந்த லாரி, வளைவில் திரும்பு போது கட்டுப்பாட்டை இழந்து கவிந்தது.

இதையும் படிங்க: "கிரிண்டர் செயலியை தடை செய்க" - தமிழ்நாடு அரசுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் கடிதம்! |
இந்த விபத்தில் மோகனின் இரு சக்கர வாகனம் லாரியின் அடியில் சிக்கியது. இதில், சம்பவ இடத்திலேயே இரு சக்கர வாகனத்தில் சென்ற மோகன் அவரது மகன் மற்றும் மகள் ஆகிய மூன்று பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரளம் காவல் நிலைய போலீசார், லாரியில் உள்ள ஜல்லிக் கற்களை பொக்கலைன் (ஜேசிபி) இயந்திரம் மூலம் அகற்றி, லாரியை தூக்கி நிறுத்ததினர். பின்னர், உயிரிழந்த 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
