சிவகங்கை: சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை கல் குவாரியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டு 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் மண்ணில் புதைந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாகோட்டை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான புளூ மெட்டல் என்ற பெயரில் கல் குவாரி ஒன்று இயங்கி வருகிறது. 150 மீட்டர் ஆழமுள்ள இந்த குவாரியில் இன்று (மே 20) திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது. இதில், அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மண்ணில் புதைந்துள்ளனர்.
இது குறித்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு வீரர்கள் மண்ணில் புதைந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் மூன்று பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில், கணேசன், முருகானந்தம், ஆறுமுகம், ஹர்ஷித், ஆண்டிச்சாமி ஆகிய 5 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்தனர். மற்றொரு தொழிலாளி மைக்கேல் என்பவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், மல்லாக்கோட்டை கிராமத்திலுள்ள கல் குவாரியில் பாறை மற்றும் மண் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் அறிவிப்பு.#CMMKSTALIN #TNDIPR pic.twitter.com/qDYz1h9yov
— TN DIPR (@TNDIPRNEWS) May 20, 2025
இதனையடுத்து, அமைச்சர் பெரிய கருப்பன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஷிஷ் ராவத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டனர். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், “தொடர்ந்து இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, பாறையின் பிடிப்புத்தன்மை தளர்ந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் பணியில் 6 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இதில், சம்பவ இடத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து, மூவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நேரத்தில், இருவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதில், சம்பவ இடத்தில் இறந்த மூன்று பேரில், இரண்டு பேர் மீட்கப்பட்ட நிலையில், ஒருவரது உடலை மீட்பதற்கு உரிய பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் வந்த பின்னர் அதற்கான பணிகள் தொடங்கும்“ என்றார்.
முதலமைச்சர் நிவாரணம்:
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளபதிவில், “சிவகங்கை மாவட்டம், மல்லாக்கோட்டையில் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரியில் இன்று காலை எதிர்பாராதவிதமாக பாறை மற்றும் மண் சரிந்து விழுந்த விபத்தில் கல் குவாரியில் பணி செய்துகொண்டிருந்த முருகானந்தம், ஆறுமுகம், கணேசன், ஆண்டிச்சாமி மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேரந்த ஹர்ஷித் ஆகிய ஐந்து நபர்கள் உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மைக்கேல் என்பவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் மற்றும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ. 1 லட்சம் நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மே 20, 2025 அன்று, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மல்லக்கோட்டை கிராமத்தில் உள்ள மெகா புளூ மெட்டல் குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவில் ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர், மேலும் ஒருவர் சிக்கிக்கொண்டுள்ளார்.
விபத்து முதல் மீட்பு வரை:
காலை 9:00 - 9:30: குவாரியில் பாறைகளை உடைக்கும் பணியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
காலை 9:30: பாறைகளை உடைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு எதிர்பாராதவிதமாக பெரிய பாறைகள் சரிவை ஏற்படுத்தியது.
காலை 9:30 - 10:00: பாறைகள் சரிந்து விழுந்ததில், ஆறு தொழிலாளர்கள் பாறைகளின் கீழ் சிக்கினர்.
காலை 10:00 - 11:00: மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மீதமுள்ளவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் இருவர் வழியிலேயே உயிரிழந்தனர்.
காலை 11:00: மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று, சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் தொடங்கின.
மதியம் 12:00: மீட்கப்பட்ட மற்றொரு தொழிலாளர், மைக்கேல், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்
மதியம் 12:00: தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மதியம் 1:00: மீட்பு பணிகள் தொடர்ந்தன.பாறைகளுக்கிடையே சிக்கிக் கொண்டிருந்த ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் அர்ஷித் (28) உடல் தேசிய பேரிடர் மீட்பு படையினராலா மீட்கப்பட்டது.
மதியம் 2:00: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டனர்.
மாலை 3:00: குவாரி உரிமையாளர் மேகவர்ணத்திடம் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
மாலை 4:00: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ₹4 லட்சம் மற்றும் காயமடைந்த மைக்கேலுக்கு ₹1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.
மாலை 5:00: வெடிப்பின் காரணமாக பாறைகள் சரிந்ததா அல்லது மழை காரணமா என்பது குறித்து காவல்துறை தரப்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இரவு 7:00: மேலும் உயிரிழந்த ஒருவரை மீட்கும்பணி காலையில் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.