திருநெல்வேலி: ஜாகிர் உசேனுக்கு கொலை மிரட்டல் வழக்கில் அலட்சியமாக செயல்பட்டதாக புகார் எழுந்த நிலையில் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உதவி ஆணையர் செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாகிர் உசேன் பிஜிலி நெல்லையில் நேற்று படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர் பேசி சமூக ஊடங்களில் வெளியான வீடியோவில், "நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பவர்களால் எனது உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தேன். தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திருநெல்வேலி டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், உதவி ஆணையாளர் செந்தில்குமார் ஆகியோர் எதிர் தரப்பிற்கு ஆதரவாக செயல்படுகின்றனர். கொலை மிரட்டல் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் ஆதாரமாக கொடுக்கப்பட்டும் காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கவில்லை," என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஜாகீர் உசேன் பிஜிலி நேற்றுக் கொல்லப்பட்டதை அடுத்து இந்த வீடியோ வைரல் ஆனது. மேலும் போலீசார் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஜாகிர் உசேனின் குடும்பத்தினர், கொலை மிரட்டல் புகார் குறித்து அலட்சியமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலைப் பெற்றுக் கொள்வோம் என்று கூறி இருந்தனர்.
இதையும் படிங்க: ''என்னை கொல்லப் போகிறார்கள்" - கொலைக்கு முன் ஓய்வு பெற்ற எஸ்.ஐ வெளியிட்ட வீடியோ வைரல்!
மேலும் இது குறித்து பேட்டியளித்த ஜாகிர் உசேன் பிஜிலியின் மகள் மோசினா, "என் தந்தை பேசிய வீடியோவை ஏற்கனவே காவல்துறையிடம் கொடுத்தோம். எனினும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே டவுண் காவல்நிலைய போலீசார் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. டவுண் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், உதவி ஆணையாளர் செந்தில்குமார் இருவரும் என் தந்தைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். எனது தந்தையிடம் போலீசார் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட ஆடியோ ஆதாரமும் எங்களிடம் இருக்கிறது,"என்று கூறியிருந்தார்.
ஜாகிர் உசேன் குடும்பத்தினரின் கோரிக்கையின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை காவல்துறை ஆணையர் உறுதியளித்தார். அதன் பின்னரே ஜாகிர் உசேன் உடலை குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். இந்த நிலையில் காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட உத்தரவில், "டவுண் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் டவுண் சரகத்தில் காவல் உதவி ஆணையராக பணியாற்றி இப்போது கோவையில் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராகப் பணியாற்றும் செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,"எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.