கோயம்புத்தூர்: கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற வாகனச் சோதனையில், ரூ.71 லட்சத்து 50 ஆயிரம் ஹவாலா பணத்தை பாலக்காடு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆந்திராவைச் சேர்ந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், கேரள மாநிலம் பாலக்காடு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த கோவை - எர்ணாகுளம் செல்லும் பேருந்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதில், பேருந்தில் ரூ. 71 லட்சத்து 50 ஆயிரம் ஹவாலா பணம் பிடிப்பட்டது.

இதனையடுத்து, பணத்தைக் கொண்டு வந்த ஆந்திராவைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், அவர் பணத்துடன் கேரள மாநிலம் கொச்சி செல்வது தெரியவந்தது. இந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் பிடிப்பட்ட பணத்தையும், சிவப்பிரகாஷையும் போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, இந்த பணத்தை அனுப்பி வைத்தவர் யார், யாருக்காக கொண்டு செல்லப்படுகிறது என்பது பற்றி, போலீசார் மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலத்திற்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கோவை வழியாக ஹவாலா பணம் அவ்வப்போது கடத்தப்பட்டு வருகிறது. ரகசிய தகவலின் பேரில், அவ்வப்போது போலீசார் சோதனையை மேற்கொண்டு ஹவாலா பணத்தை பறிமுதல் செய்வது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, ஹவாலா பணம் கொண்டு செல்லப்படுவது குறித்த தகவல் அறியும் சில கும்பல், ஹவாலா பணம் கொண்டு செல்லும் வாகனங்களை வழிமறித்து கொள்ளையடிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.