திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதி பின்னலாடை நிறுவனத்தில் பணி செய்து வந்த 29 வங்கதேச தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் போலி ஆதார் கார்டு தயாரித்து தமிழகத்துக்குள் நுழைந்தது தெரிய வந்தது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாகரை ஊராட்சி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து, வெளிநாடுகளுக்கு அதிகளவில் பனியன்கள், உள்ளாடைகள் தயார் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த பின்னலாடை நிறுவனத்தில் பீகார், ஒடிசா, அசாம், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வங்காளதேசத்தை சேர்ந்த 29 பேர் ஒட்டன்சத்திரம் வாகரை மில்லில் தங்கி வேலை பார்ப்பதாக ஒட்டன்சத்திரம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் ஒட்டன்சத்திரம் காவல்துணை கண்காணிப்பாளர் டி.எஸ்.பி கார்த்திகேயன், ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் காவல் துறையினர் பின்னலாடை நிறுவனத்துக்கு விரைந்து வந்தனர்.
இதையும் படிங்க: கட்சிக் கொடி கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து துடித்த 2 சிறுமிகள்! உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றியவருக்கு பாராட்டு!
பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு வேலை பார்த்து வந்த 29 பேரையும் பிடித்து அவர்களுடைய ஆதார் கார்டு மற்றும் முழு விவரங்களை கேட்டு வாங்கி ஆய்வு செய்தபோது அவர்கள் போலியாக ஆதார் கார்டு தயாரித்து தமிழகத்துக்குள் நுழைந்து பணியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை முழுமையாக பரிசோதனை மேற்கொண்டு கைரேகை பதிவுகளை சேகரித்தனர். பின்னர், 29 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களை ஒட்டன்சத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பணியாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.