சென்னை: சென்னை ராயப்பேட்டை பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த 5 ஆம் தேதி இரவு 11 மணி அளவில் மூதாட்டி வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து மூதாட்டி இடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் நகை கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி தன்னிடம் பணம், நகை எதுவுமில்லை என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர் மூதாட்டியை கையால் சரமாரியாக தாக்கி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதில் காயம் அடைந்த மூதாட்டி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மூதாட்டி அளித்த புகாரின்பேரில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், ராயப்பேட்டை உதவி ஆணையர் உத்தரவின்பேரில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ஜாம்பஜார் பகுதியில் வசித்து வரும் நாகராஜ் (39) என்பவர் மூதாட்டியை தாக்கி பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்ததை அடுத்து அவரை கைது செய்தனர்.
முன்னதாக போலீசார் நாகராஜனை பிடிக்க சென்ற போது அவர் தப்பிச் செல்ல முயன்று கீழே விழுந்ததில் கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், எனவே அவருக்கு நேற்று (ஏப்ரல் 7) இரவு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மாவுக்கட்டு போடப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணையில் நாகராஜ் பிளக்ஸ் போர்டுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மூதாட்டி வசிக்கும் பகுதியில் நாகராஜ் பிளக்ஸ் போர்டு அமைத்துள்ளார். அப்போது மூதாட்டி வீட்டில் தனியாக இருப்பதை பார்த்து, நீண்ட நாட்களாக கண்காணித்து நகை, பணம் பறிக்க திட்டம் தீட்டியுள்ளார்.
இதையும் படிங்க: "தமிழ்நாட்டில் என்கவுன்ட்டர்கள் எப்படி நடக்கிறது?'' - பகீர் தகவலை பற்ற வைத்த சீமான்!
பின்னர் சம்பவம் நடந்த அன்று இரவு நேரத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் வீடு புகுந்து அவரை மிரட்டிய போது பணம், நகை எதுவும் இல்லாததால் பாலியல் தொல்லை கொடுத்ததை நாகராஜன் ஒப்புகொண்டுள்ளார். இதையடுத்து நாகராஜன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்