மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் பருவம் தவறி பெய்த பெய்த கனமழையின் காரணமாக சுமார் 60,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன.
இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 3500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். காப்பீடு நிறுவனத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பிரிமியம் செலுத்தி வரும் நிலையிலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்காமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.
இதனை கண்டிக்கும் வகையிலும், கடலூர் மாவட்டத்தில் வழங்கியது போல மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் இழப்பீடு தொகை வழங்க கோரியும் மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மயிலாடுதுறை- கும்பகோணம் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, கண்டன முழக்கம் எழுப்பினர்.
இதையடுத்து மயிலாடுதுறை டிஎஸ்பி பாலாஜி போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் உடன்பாடு ஏற்படாததால் டிஎஸ்பி பாலாஜி தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீசார் விவசாயிகளை வலுக்கட்டாயமாகவும், குண்டுக்கட்டாகவும் தூக்கி சென்று வேனில் ஏற்றி கைது செய்தனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போலீசாரை கண்டித்தும் விவசாயிகள் கண்டன கோஷம் எழுப்பினர். மேலும் போலீஸ் வேனை செல்ல விடாமல் சக விவசாயிகள் மறித்து போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வருவதாக போலீசார் உறுதி அளித்ததையடுத்து கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அதே சமயம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தெரிவித்து விவசாயிகள் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பிக் கொண்டு இருந்தனர்.
இதையும் படிங்க: ஒரே நாளில் 2 ஆவது முறையாக உயர்வு! 'தங்கம் விலைய கேட்டா... தாங்க மாட்டீங்க'!
இதன் பின்னர் சம்பவ இத்துக்கு வந்த வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்சூரன்ஸ் மற்றும் நிவாரண தொகை குறித்து எந்தவொரு உத்தரவாதமும் கொடுக்க முடியாது என்று கூறி விட்டு சென்றனர். எனவே, இதனை கண்டித்து வரும் 23 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகளை ஒருங்கிணைத்து காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்