திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் முனிசாமி. டெய்லர். கடந்த 16 ஆம் தேதி முனிசாமி தனது குடும்பத்துடன் வெளியில் சென்று இருந்தார். பின்னர் வீடு திரும்பிய முனிசாமி வீட்டின் பீரோ உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் 14 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
அதிர்ச்சியடைந்த முனுசாமி இது குறித்து உடனடியாக வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
சந்தேகத்துக்கு இடமான நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்தப் பகுதியில் வழக்கமாக திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் கைவரிசையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். போலீசாரின் தொடர் விசாரணையில் முனிசாமியின் வீட்டின் அருகே வசிக்கும் கீதா என்ற மூதாட்டி (61) மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டபோது, முனிசாமி குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருப்பதை அறிந்து வீட்டின் பின்பக்கம் கதவை இரும்பு கம்பியால் உடைத்து 20 சவரன் தங்க நகை மற்றும் 14 ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
இதையும் படிங்க: ஊதிய உயர்வு வழங்க சாம்சங் ஒப்புதல்: "தொழிலாளர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?" - அமைச்சர் சிவி கணேசன் தகவல்!
மேலும், கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகையை வாணியம்பாடியில் உள்ள அடகு கடையில் விற்பனை செய்ததும் காவல் துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக கீதாவை வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் நகைகளை அடகு கடையில் இருந்து பறிமுதல் செய்வதற்கும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பக்கத்து வீட்டுக்குள்ளேயே தைரியமாக புகுந்து மூதாட்டி திருடிய சம்பவம் போலீசாருக்கு மட்டுமின்றி அந்தப் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.