தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் திருமணமான 34 வயது பெண் அங்குள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் குடவாசல், மேட்டு தெருவை சேர்ந்த சண்முகபிரபு (29), கும்பகோணம், பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த பாஸ்கர் (40) மற்றும் பாபநாசத்தை சேர்ந்த பிரகதீஸ்வரன் ( 40 ) ஆகிய 3 பேரும் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற 34 வயது பெண்ணிடம் ''கொஞ்சம் தனியா பேசணும் வாம்மா" என கூறி 3 பேரும் உமாமகேஸ்வரபுரம் கரிக்குளம் பகுதியில் புதிதாக வீடு கட்டும் இடத்தில் வாட்ச்மேனாக பணியாற்றும் சீனிவாசநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (48) என்பவரின் உதவியுடன் அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
பாலியல் துன்புறுத்தலில் இருந்து சம்மந்தப்பட்ட பெண் தப்பி கூச்சலிட்டபடி வெளியே ஓடி வந்து அவரது சகோதரருக்கு தகவல் தந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் வந்த பிறகு இதுகுறித்து சம்மந்தப்பட்ட பெண் தனது சகோதரனுடன் இணைந்து, திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக புகாரளிக்க சென்றுள்ளனர்.
அப்போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் இந்த காவல் நிலையத்தில் இந்த வழக்கிற்கான புகாரினை அளிக்க முடியாது. இந்த வழக்கு குறித்து ஆடுதுறையில் உள்ள திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகாரளிக்குமாறு திருப்பி அனுப்பி வைத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண், ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னுடன் வேலை பார்ப்பவர்கள் தன்னை பலவந்தப்படுத்தி கூட்டுப் பாலியல் துன்புறுத்தலுக்கு முயன்றதாகவும், இதுகுறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளித்து உள்ளார்.
இதையும் படிங்க: தாய்மொழி 'ஹிந்தி'.. தமிழில் 93 மதிப்பெண்கள்! மாணவிக்கு 'காலை உணவு திட்டம்' செய்த மாயஜாலம்!
இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது இந்த சம்பவம் உண்மை என்பது தெரிய வந்தது. இதையடுத்து சண்முகபிரபு, பாஸ்கர், பிரகதீஸ்வரன் மற்றும் வாட்ச்மேன் சரவணன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 34 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.