மதுரை: பள்ளி சீருடைக்காக அளவெடுக்க வந்த ஆண் டெய்லர் அத்துமீறி நடந்துகொண்டதாக மாணவி கொடுத்த புகாரின்பேரில் பள்ளி ஆசிரியை, டெய்லர் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அடுத்த ஆண்டுக்கான பள்ளிச் சீருடைக்கு அளவெடுக்க வந்த ஆண் மற்றும் பெண் டெய்லர் குறித்து சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் 15 வயது பள்ளி மாணவி ஒருவர் புகார் கொடுத்தார்.
அந்த புகார் மனுவில் , 'மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நான் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். இதுவரை எனக்கு பள்ளி சீருடை அளவெடுக்க யாரும் வந்ததில்லை. சம்பவத்தன்று பள்ளியில் சீருடை அளவெடுக்க ஒரு ஆண் உட்பட 2 பேர் வந்தனர். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இதுதொடர்பாக எனது வகுப்பு ஆசிரியையிடம் கூறினேன். ஆனால் அவர் கண்டிப்பாக சீருடைக்கு அளவெடுக்க வேண்டும் என கூறினார். பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் ஆண் டெய்லரும் அவருக்கு உதவியாக வந்த பெண்ணும் என்னிடம் அத்துமீறி அளவெடுத்தனர். அப்போது என்னை தொட்டனர். எனவே அவர்கள் மீதும், உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இபிஎஸ் அமித் ஷாவை சந்தித்தது தவறல்ல; அப்படியே தமிழ்நாட்டின் கோரிக்கைகளை வலியுறுத்துங்கள் - ஸ்டாலின் -
இச்சம்பவத்தை கண்டித்து மகளிர் மற்றும் மாணவர் சங்க அமைப்புகள் இன்று பள்ளியின் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து காவல் சார்பு ஆய்வாளர் கவிதா, குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி ஆண் டெய்லர், அவருக்கு உதவியாக வந்த பெண் மற்றும் பள்ளி ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு அளவெடுக்க வந்த ஆண் டெய்லர், பள்ளி ஆசிரியை உட்பட மூன்று பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பள்ளியில் மாணவிகளின் சீருடைக்கு அளவெடுக்க பெண் டெய்லருக்கு பதிலாக ஆண் டெய்லர் எப்படி அழைக்கப்பட்டார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.