விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களை சமாதானப்படுத்த பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்பட முன்னணி நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின் அனைத்தும் முயற்சிகளும் தோல்வி அடைந்து வருவதால், கட்சியில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. தந்தை, மகன் ஆகிய இருவரில் யாரை ஆதரிப்பது? என்று தெரியாமல் கட்சியினர் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இதற்கிடையே அன்புமணி ஆதரவு நிலைப்பாடு எடுத்த பாமகவின் பொருளாளர் திலகபாமா மற்றும் 41 மாவட்ட நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கி விட்டு தனது ஆதரவாளர்களை நியமித்துள்ளார். அது மட்டுமல்லாமல், கடந்த மே மாதம் 16 ஆம் தேதி முதல் நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து ராமதாஸ் ஆலோசித்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த 5 ஆம் தேதி காலை தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி, ராமதாஸை சந்தித்து பேசினர். சுமார் 45 நிமிடம் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பை தொடர்ந்து, ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகிய இருவரும் ஒரே காரில் வந்து தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் உடன் சந்திப்பு மேற்கொண்டனர்.
இந்நிலையில் பாமகவில் முக்கிய முகமாக அறியப்பட்ட வழக்கறிஞர் பாலுவை, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். பாமகவில் சமூக நீதி பேரவை தலைவர் பதவியிலிருந்து பாலுவை நீக்கிய ராமதாஸ், பாலுவிற்கு பதிலாக வி.எஸ்.கோபு என்ற வழக்கறிஞரை சமூக நீதிப் பேரவையின் புதிய தலைவராக நியமித்து, அறிவித்துள்ளார். ஏற்கனவே அன்புமணியின் ஆதரவு நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கி வரும் நிலையில் இந்த அறிவிப்பும் பாமக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வழக்கறிஞர் வி.எஸ்.கோபு செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ''வழக்கறிஞர் பாலு செய்யாமல் விட்ட அனைத்து பணிகளை பாமகவில் நான் செய்ய இருக்கிறேன். பாமகவில் நிறுவனர் ராமதாஸ் அறிவிக்கும் பொறுப்புகள் தான் செல்லும். பாமக தலைவர் அன்புமணி ராமதாசை செயல் தலைவராக நியமித்து, ராமதாஸ் அறிவித்தார். அவர் அறிவித்த பொறுப்பிலேயே அன்புமணி ராமதாஸை பார்க்கிறேன்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ''மேயர் உள்பட எந்த கவுன்சிலர்களும் மக்களை சந்திப்பது இல்லை'' - வெளுத்து வாங்கிய அமைச்சர் நாசர்!
இந்த நிலையில் பாமக சமூக நீதி பேரவையின் மாநில தலைவராக ராமதாஸால் நியமிக்கப்பட்ட கோபு வழக்கறிஞர் பாலுவை விமர்சித்து பாடல் ஒன்று பாடியுள்ளார். அவர் பாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அண்மையில் ஒரு பாடல் நாடு முழுவதும் வைரல் ஆனது. ஒடிசா மொழியில் 1990-களில் வெளியான படத்தில் சீதாராம் அகர்வால் என்பவர் எழுதிய பாடல் இது. இந்த படத்தில் நடித்த நடிகர் பிபூதி விஷ்வால் ரியாக்ஷனோடு கூடிய வீடியோ பாடல் தான் சமீபத்தில் ட்ரெண்ட் அடித்தது.
இந்த பாடலை தமிழ் உட்பட பல மொழிகளிலும் டப் செய்து பாடி வந்தனர். இந்த பாட்டை சற்றே மாற்றி, வழக்கறிஞர் பாலுவை விமர்சிக்கும் வகையில் பாடியுள்ளார் பாமக சமூக நீதி பேரவையின் புதிய தலைவர் கோபு.
"பணத்துக்காக ஐயாவை மறந்து அவர் கூட போனியே.. குலசாமி ஐயாவ மறந்து அவர் கூட போனியே. அவருக்கு வயசு ஆயிருச்சு என்று சொல்லி அவர் கூட போனியே. ஐயா நீச்சல் குளத்துல குளிக்கிற நேரத்துல அவர் கூட போயிட்டியே. குளித்து முடித்து முகத்தை துடைக்கும் போது பனையூர் போய்ட்டு இருந்தியே.. சீச்சிச்சீ.. சீச்சீச்சீ.. நீ ஒரு ச்சீ" என பாடியுள்ளார் கோபு. இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்