சேலம்: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் சின்னப்பம்பட்டி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுவேலமங்கலம், கருங்கரடு, வெள்ளைகரடு, தானமூர்த்தி காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சிறுத்தை ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது. ஊருக்குள் வரும் சிறுத்தை ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வேட்டையாடியது மட்டுமின்றி, பகல் நேரத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், ஊருக்குள் உலாவும் சிறுத்தையைப் பிடித்து அடர்ந்த காட்டிற்குள் விடுவதற்காக சேலம் மாவட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து, அதற்காக காட்டிற்குள் சிசிடிவி கேமராக்கள் வைத்தும், ட்ரோன்கள் மூலமாக சிறுத்தையைக் கண்காணித்து வந்தனர். மேலும், ஈரோடு, தருமபுரி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு வனக் குழுவை வரவழைத்து, எட்டு இடங்களில் கூண்டுகளை வைத்து சிறுத்தையைப் பிடிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி சின்னப்பம்பட்டி கிராமத்தை ஒட்டியுள்ள பகுதியில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அதனைக் கண்ட வனத்துறையினர், உடனடியாக மாவட்ட அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற மாவட்ட வன அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள், அந்த இடத்திலிருந்த சிறுத்தையை பிரேதப் பரிசோதனை செய்து எரித்தனர்.
இந்த பிரேதப் பரிசோதனை அறிக்கையில், யாரோ சிறுத்தையை நாட்டு துப்பாக்கியால் சுட்டும், தலையில் பலமாக அடித்தும் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. பின்னர் நாட்டு துப்பாக்கி குண்டுகளை சிறுத்தையின் உடலில் இருந்து கைப்பற்றி, சிறுத்தையை சுட்டும், தாக்கியும் கொன்ற நபர்கள் குறித்து மேட்டூர் வனச்சரகர் சிவானந்தன் தலைமையிலான வனத்துறையினர் விசாரித்து வந்தனர்.
அதில் சிறுத்தையை சுட்டுக் கொன்றது பாமகவைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனுசாமி மற்றும் அவரது நண்பர்களான சசி, ராஜா ஆகிய மூன்று பேர் என்பது தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியையும் வனத்துறயினர் பறிமுதல் செய்தனர். மேலும், வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதான முனுசாமி, சசி, ராஜா ஆகிய மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தப்பட்டது.
அதில், "மூன்று பேரும் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி அதிகாலை சிறுத்தை இருக்கும் இடத்திற்குச் சென்று, சிறுத்தையை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, பின்னர் இறந்து விட்டதா என அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது லேசாக உயிர் இருந்ததால், கட்டையால் சிறுத்தை தலையில் அடித்துக் கொன்றது" தெரியவந்தது.
மேலும், சுமார் 20 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடிக்காததால், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றோம் எனவும் அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்திருப்பதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கைதான மூன்று பேரும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்