சேலம்: பாமக நிறுவனர் ராமதாஸுக்கு எதிராக அக் கட்சியை சேர்ந்த நிர்வாகி கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அந்த கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸூக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நடைபெற்று வருகிறது. அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் தொடர்ச்சியாக நீக்கி வருவதும், அவர்களுக்கு அன்புமணி தரப்பு மீண்டும் பதவிகளை வழங்கி வரும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சில இடங்களில் அன்புமணிக்கு வழி விட வேண்டும் என்று ராமதாஸுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதற்கு போட்டியாக 'சிறை சென்றவனே தலைவர்' என வேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அன்புமணிக்கு எதிராக அக் கட்சி தொண்டர்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவங்களும் நடைபெற்றன.
இதற்கிடையே தற்போது சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாமக நிர்வாகி ஒருவர் ராமதாஸுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்.

பாமகவின் துணை அமைப்பாளராகவும் பசுமை தாயகத்தின் மாநில இணை செயலாளராகவும் செயல்பட்டு வருபவர் சத்ரிய சேகர். மருத்துவர் ராமதாஸ் அணியில் இருந்து வந்த சத்ரிய சேகர் திடீரென சமூக வலைதளங்களில் ராமதாஸுக்கு எதிராக கருத்தினை வெளியிட்டுள்ளார். அதில், "கட்சியை உருவாக்கிய ராமதாஸே அக்கட்சி அழிவதற்கு காரணமாக இருக்கிறார். பாமகவை காப்பாற்ற வேண்டுமென்றால் அன்புமணியின் கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த மாதம் சென்னையில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட சத்ரிய சேகர், தன்னையும் ராமதாஸ் எங்கே நீங்கி விடுவாரோ என்ற அச்சத்தில் இவ்வாறு கருத்து பதிவிட்டுள்ளதாகவும், எதிர் தரப்பை சேர்ந்த பாமக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே நிலவி வரும் கருத்து மோதல் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் முதல் முறையாக நிர்வாகி ஒருவர் ராமதாஸுக்கு எதிரான கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்