ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி கடன் தொல்லையால் இளைஞர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டதால், ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த 2022ம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன் லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.
இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதித்ததை உறுதி செய்தது. மேலும், திறமைக்கான ஆன்-லைன் விளையாட்டான ரம்மி, போக்கர் (ஒருவகையான சீட்டாட்டம்) விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்ததுடன், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கான விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு கடந்த 2023ம் ஆண்டு உத்தரவிட்டது.
புதிய விதிகள்:
உயர் நீதிமன்ற உத்தரவின் படி ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குமுறைபடுத்த விதிமுறைகளை வகுத்து 2025 பிப்ரவரி 14ம் தேதி அரசிதழில் வெளியிட்டது. அதில், பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளில் பங்கெடுக்க 18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் பங்கெடுப்போர் ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாடும் போது, அரை மணி நேரத்திற்கு ஒருமுறை எச்சரிக்கை குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதியை ஏற்படுத்த வேண்டும். விளையாடுவோர் ஒரு நாளைக்கு, ஒரு வாரத்துக்கு, ஒரு மாதத்துக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே பணம் வைத்து விளையாட வேண்டும் என வரம்பு நிர்ணயிக்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டு அடிமைப்படுத்தும் எனவும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது எனவும் விதிகளில் கூறப்பட்டுள்ளது.
இந்த விதிகளை எதிர்த்து, ப்ளே கேம்ஸ் 24x7 பிரைவேட் லிமிட்டெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ் மற்றும் எஸ்போர்ட் ப்ளேயர்ஸ் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், வர்த்தக உரிமையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ள தமிழக அரசின் புதிய விதிகள் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 28) இரண்டாவது விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆன்லைன் நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், '' ஆன்லைன் ரம்மியில் பணம் வைத்து விளையாடுவது விளையாடுபவரின் தனிப்பட்ட விருப்பம். ஆன்லைன் ரம்மியில் திறமையாக விளையாடி வெற்றி பெறும் வாடிக்கையாளர்களின் பணம் அவர்களின் வங்கி கணக்கில் உடனே செலுத்தப்படுகிறது.
எல்லா விளையாட்டுகளுக்கும் நுழைவுக் கட்டணம் என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் நிறுவனங்கள் விருப்பமுள்ள இரு வீரர்கள் கேம் விளையாடுவதற்கான ஒரு களமாக மட்டுமே செயல்படுகிறது. அதற்காக நுழைவுக்கட்டணம் வசூலிக்கிறது. நிறுவனம் யாருடனும் விளையாடுவதில்லை.
குறிப்பாக, இதே நடைமுறை தான் ஐ.பி.எல், ஐ.சி.சி உள்ளிட்ட அமைப்புகளும் போட்டிகளை நடத்துகின்றன. தமிழக அரசின் புதிய விதிகளால் திறமையாக விளையாடும் வீரர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். நிறுவனங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அடிக்கடி எச்சரிக்கை செய்தி அனுப்பினால் விளையாட்டில் திறமையாக விளையாடும் வீரர்களின் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 'தற்கொலை முயற்சி என்பது குற்றமல்ல' என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் வேலை செய்ய வேண்டும்? விளையாட வேண்டும்? என்பதை அரசு நிர்ணயிக்க முடியாது. அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்காக தனிநபர் என்ன செய்ய வேண்டும்? செய்ய கூடாது? என்பதை அரசாங்கம் முடிவு செய்ய கூடாது. அவ்வாறு செய்தால் இந்திய அரசியலமைப்பின் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படும்.
தவறான நடவடிக்கையில் ஈடுபடுவது மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சட்டவிரோத நடவடிக்கையில் ஒருவர் ஈடுபட்டால் மட்டுமே அரசு நடவடிக்கை எடுக்க முடியும். ஓய்வு நேரத்தை விளையாட்டில் செலவிடும் வாடிக்கையாளரை விதி என்ற பெயரில் கட்டுப்படுத்த முடியாது.
புகைபிடிப்பது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், அதை யாரும் விடவில்லை. சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் இருந்தும் ஏன் அதை செய்வதில்லை? என தெரிவித்தார். இதையடுத்து தமிழக அரசு தரப்பு வாதத்திற்காக விசாரணையை ஏப்ரல் 1ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.